
விஷம் / ஆசிட் குடித்தால்:
என்ன குடித்தார்கள், எவ்வளவு குடிக்கப்பட்டது என்ற விவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
வாந்தி எடுக்கத் தூண்டக் கூடாது. விரலை உள்ளே விட்டோ, சாணம் அல்லது உப்புக் கரைசலைக் கொடுத்தோ, வாந்தி எடுக்கச் செய்யக் கூடாது.
அவராகவே வாந்தி எடுத்தால், இடது பக்கமாக ஒருக்களித்துப் படுக்கவைக்கலாம். வாந்தி உள்ளே போய், மூச்சுக்குழல் அடைபடாமல் இருக்க இது உதவும்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
அடிபடுதல்
உயரமான மரம் அல்லது கட்டடத்திலிருந்து யாரேனும் விழுந்துவிட்டால், உடனே ரத்தம் வருகிறதா என்று பார்க்க வேண்டும். ரத்தம் வந்தால், முன்னே சொல்லியது போல, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ரத்தம் வெளியே வராவிட்டாலும் உள்ளே ரத்தக் கசிவு இருக்கலாம். அப்படி இருந்தால் மயக்கம் வரும். குளிரும். அவரைக் கீழே படுக்கவைத்து, கால்கள் இரண்டையும் மேலே சிறிது உயரமாகத் தூக்கிவைக்க வேண்டும்.
அவரைத் தூக்கும்போதும், கழுத்தின் நிலையைக் கவனமாகப் பார்த்துத் தூக்க வேண்டும், ஏனெனில், தண்டுவடம் பாதிக்கப்பட்டால், பிறகு ஆயுள் முழுவதும் பிரச்னையாகிவிடும்.
கால்களை மடக்கியபடி விழுந்திருந்தால், காலை நீட்ட முயற்சிக்க வேண்டாம். உட்காரவைக்காமல், படுத்த நிலையில்தான் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.
வாயில் ரத்தம் வந்தால், துப்பச் சொல்லலாம். விழுங்கக் கூடாது.
விழுந்தவர் பெண்ணாக இருந்தால், அவர் கர்ப்பிணியா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.