
வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்
** வெந்தயத்தில் வைட்டமின் ‘ஈ’ நிறைந்திருக்கிறது. ஊறுகாய் தயாரிப்பில் வெந்தயம் கெடாது காக்கும் பொருளாக அதனுடன் சேர்க்கப்படுகிறது.
** வெந்தயம், எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து தயாரிக்கும் தேநீர் பன்னெடுங்காலமாக காய்ச்சலைத் தணிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
** வெந்தயக் கீரையைக் கொண்டு அவ்வப்போது தயாரிக்கும் பசையைக் கொண்டு தலைக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிப்பதால் தலைமுடி செழுமையாக வளரவும், தலைமுடி நல்ல வண்ணத்தைப் பெறவும், பொடுகுத் தொல்லை ஒழியவும் செய்கிறது.
** வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாகப் பூசுவதால் ‘எக்ஸிமா’ எனப்படும் தோல் நோய், தீப்புண்கள், சீழ் பிடித்த கட்டிகள் மற்றும் மூட்டுகளில் வாதநீர் கோர்த்து வீக்கம் கண்டு வலித்தல் ஆகியன குணமாகின்றன.
** வெந்தயம் உள்ளுக்கு சாப்பிடுவதால் கருப்பையின் சுருங்கி விரியும் தன்மை பலப்படுகிறது. மேலும், பிரசவத்தின்போது குழந்தைப் பிறப்பதைத் துரிதப்படுத்துகிறது.
** வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் பெண்களின் ஹார்மோன் சுரப்பிகள் சரியான நிலையில் செயல்படுவதோடு மார்பகங்களும் வனப்புற விளங்கும்.
** வெந்தயத்தை இரவு முழுதும் நீர் விட்டு ஊறவைத்து, காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலை முடிக்கும் தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்குக் குளிக்க பொடுகுகள் போகும்.
** வெந்தயத்தை இரவு ஊறவைத்து காலையில் அரைத்து முகத்துக்குத் தடவி வைத்திருந்து குளித்து விடுவதால் முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து போகும். முகப்பருக்களும் குணமாகும்.
** வெந்தயத்தோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி விட முகப்பருக்கள் குணமாகும்.
** வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகின்றது.
** வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்கக் கூடியது. கற்கள் வராமல் தடுக்கக் கூடியது. சிறுநீரைப் பெருக்கிக் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.
** 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.
** வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனோடு 4 கப் நீர் ஊற்றி அடுப்பிலிட்டு 15 நிமிடங்கள் காய்ச்சி எடுத்து ஆறவைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு தினம் இரண்டு முறை முகத்தைக் கழுவுவதற்கு உபயோகித்தால் முகத்துக்கு நல்ல வனப்பையும், சுருக்கங்களை நீக்கி நல்ல மென்மையையும் பொன் வண்ணத்தையும் தரும்.
** 5 கிராம் வெந்தயத்தை வேகவைத்துக் கடைந்து எடுத்து அத்தோடு போதிய தேன் சேர்த்துக் கொடுக்க தாய்ப்பால் பெருகும்.
** முடி கொட்டுகிற பிரச்னைக்குவெந்தயம் மிகச்சிறந்த நிவாரணி ஆகும். முடி கொட்டுதல், பொடுகு, தலை வழுக்கை, முடி மெல்லியதாக ஆகுதல் ஆகியவற்றுக்கு வெந்தயத்தை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதோடு ஊறவைத்து அரைத்து தலைக்கு தடவி வைத்திருந்து குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
** வெந்தயம் இளநரையையும் போக்கக்கூடிய நன்மருந்தாகும். கைப்பிடி அளவு வெந்தயத்தை 300 மி.லி தேங்காய்எண்ணெயில் இட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி இளஞ்சூட்டோடு தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து வர இளநரையைத் தடுத்து நிறுத்தும். எண்ணெய் இரவு முழுதும் தலையில் ஊறும்படி வைத்திருந்து காலையில் குளிக்க வேண்டும்.
** இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கெட்ட கொழுப்பு சத்தான எல்.டி.எல். கொலஸ்ட்ரால் குறைந்து விடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
** வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமான பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்புச்சத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
** தீப்பட்ட புண்களின் மீது வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாக பூசி வர விரைவில் புண்கள் ஆறும். வடுக்கள் தோன்றாது.
** வெந்தயப் பொடியை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொண்டு அந்தி சந்தி என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.