“டயட்” இருப்பவர்கள் செய்யும் 12 தவறுகள்…

 
Published : Feb 18, 2017, 01:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
“டயட்” இருப்பவர்கள் செய்யும் 12 தவறுகள்…

சுருக்கம்

பேலியோ, வீகன், மெடிட்டரேனியன் என உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க எத்தனையோ விதமான டயட் முறைகள் வந்துவிட்டன.

டயட் அட்டவணையைச் சரியாகப் பின்பற்றி, மாதக்கணக்கில் டயட் இருந்தும், உடல் எடை குறையவில்லை எனப் பலர் வருந்துவார்கள்.

ஆனால் அதன் விதிகளை நாம் ஒழுங்காகப் பின்பற்றுகிறோமா என்று கேட்டால், `நிச்சயம் இல்லை’ என்றுதான் பதில் வரும்.

நம்மில் பலர் டயட் இருக்கும் காலத்தில் செய்யும் சில பொதுவான தவறுகள், நமது எடை குறைக்கும் முயற்சிக்குத் தடையாக உள்ளன.

டயட் பின்பற்றும் சமயங்களில் நாம் செய்யும் 12 தவறுகளைப் பார்ப்போம்.

டயட்

1* குறிப்பிட்ட காலத்துக்கு டயட் முறையைப் பின்பற்றும்போது காலை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யலாம். ஆனால், பலர் காலையில் நெடுந்தூரம், நடைப்பயிற்சி, ஜாகிங் செய்துவிட்டு வீட்டுக்கு வந்து, டயட் இருக்கிறோம் என்பதை மறந்து இரண்டு மடங்கு உணவைச் சாப்பிடுவார்கள். இப்படிச் செய்யக் கூடாது. டயட் பிளானில், காலையில் எந்த உணவை, எவ்வளவு சாப்பிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்கு மட்டுமே சாப்பிட வேண்டும்.

2* அளவுக்கு அதிகமான மாவுச்சத்து, கலோரிகளை அதிகரிக்கும். உடலில் சேர்ந்துள்ள அளவுக்கு அதிகமான மாவுச்சத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, பலர் அன்றாட உணவில் அரிசியை முற்றிலுமாகத் தவிர்த்து விடுகிறார்கள். அதற்குப் பதிலாகக் கொழுப்பற்ற, சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பதப்படுத்திய ராகிப் பொருட்களைச் சாப்பிடுகிறார்கள். இவற்றில் உள்ள அதீதச் சர்க்கரை, மாவுச்சத்தைக் காட்டிலும் ஆபத்தானது.

3* இன்று மார்கெட்டில் பலவித புரோட்டீன் டிரிங்ஸ் வந்துவிட்டன. கடுமையான ஜிம் பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் டயட் இருப்பவர்களும் உடலில் புரதத்தை அதிகரிக்க இவற்றைக் குடிக்கிறார்கள். உடலில் சேரும் அதீதப் புரதம் கொழுப்பாக மாற்றப்பட்டு, அடிவயிற்றில் சேமிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

4* பெரும்பாலான டயட் முறைகளில் காலை உணவில் பழச்சாறு இடம்பெறும். ஆனால், டயட் இருக்கும் பலர், பழச்சாற்றில் சர்க்கரை சேர்க்கிறார்கள். இது தவறு. ஐஸ் கட்டி, சர்க்கரை சேர்க்காத ஃப்ரெஷ் ஜூஸ் அருந்துவது நல்லது.

5* பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் தூக்கத்தோடு தொடர்புடையவை. போதிய தூக்கம் அவசியம். டயட் காலத்தில் பலர் தூக்கமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பலன் இல்லை. ஒரு நாளைக்குக் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்கவேண்டும்.

6* உண்ணும்போது கடைப்பிடிக்கவேண்டிய விதிகளைப் பின்பற்றாமல் இருப்பதுதான் உடல்பருமனுக்கு முக்கியக் காரணம். உணவை விழுங்குவதற்கு முன்னர், நன்கு பற்களால் மென்று விழுங்க வேண்டும். சாப்பிடும் நேரத்தில் டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

7* பெரும்பாலானோர், பசி அதிகமாகும்போது, ஆரோக்கியமான உணவைத்தானே அதிகம் சாப்பிடுகிறோம் என நினைத்து, அளவுக்கதிகமாகச் சாப்பிடுகிறார்கள். உதாரணமாக, ஒருவர் தனது டயட் முறைப்படி காலை உணவாக வெண்ணெய், ஆம்லெட் சாப்பிட வேண்டும் என்றால், குறிப்பிட்ட அளவு மட்டுமே அவற்றைச் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், டயட் இருப்பதில் பலனில்லை.

8* கொலஸ்ட்ரால் என்றாலே கெடுதல் என்ற எண்ணம், நம் மக்களிடையே உள்ளது. இது தவறு. நல்ல கொலஸ்ட்ரால் உள்ள நட்ஸ், மீன்கள், உலர்பழங்கள், தானியங்கள் ஆகியவற்றைச் சாப்பிடுவது நல்லது.

9* வைட்டமின், சத்து மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சாப்பிடக் கூடாது. கால்சியம், இரும்புச்சத்து மாத்திரைகளை நாமாகச் சாப்பிடக் கூடாது. இவற்றில் தாதுக்களின் அளவு அதிகமாக இருக்கும். பேரீச்சை, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், காய்கறிகள், கீரை, பருப்பு வகைகள், முட்டை, பால் ஆகியவற்றின் மூலமாக இயற்கையாகக் கால்சியம், இரும்புச்சத்தைப் பெறலாம். எந்தவித டயட்டைப் பின்பற்றினாலும், அவற்றில் மேற்கூறிய பெரும்பாலான இயற்கை உணவுகள் இடம்பெறும்.

10* பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ‘Organic’, ‘Gluten-free’ என்ற வார்த்தைகளை விளம்பரத்துக்காகப் பயன்படுத்துவார்கள். இதை நம்பி பலர், இவற்றைச் சாப்பிடத் தொடங்குவார்கள். இப்படி விளம்பரங்களை நம்பாமல், அவற்றின் உண்மையான தன்மையை அறிந்து வாங்குவது நல்லது.

11* கொழுப்பு என்றாலே கெடுதல் என நினைப்பது தவறு. சாச்சுரேடட் கொழுப்பு, உடலுக்கு நல்லது. சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த சோயா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், இறைச்சி, முட்டை ஆகியவற்றை அளவுடன் சாப்பிடலாம்.

12* டயட் இருக்கும்போது, மைதாப் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை, இதய நோய்கள் என பல பிரச்னைகளுக்கு வழிவகுப்பது மைதா என்பதை கவனத்தில் கொள்ளவும்.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!