உடல் பருமனால் ஏற்படும் உடல் உபாதைகள்…

 
Published : Nov 24, 2016, 02:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
உடல் பருமனால் ஏற்படும் உடல் உபாதைகள்…

சுருக்கம்

உடல் பருமன் ஆபத்தானது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு அதுவே அடிப்படை என்பதையும் அறிவோம். உடல் பருமன் உள்ளவர்களுக்கு உடல் வலிகளும் அதிகம் வரும் என்கிற புதிய புள்ளிவிவரம் சொல்கிறது மருத்துவம்.

உடல் பருமனால் வலிகள் அதிகரிப்பதன் பின்னணி, தீர்வுகள் மற்றும் லேட்டஸ்ட் சிகிச்சைகள் என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். ‘‘உடல் பருமனை பி.எம்.ஐ என்கிற அளவீட்டால் அறிகிறோம். பி.எம்.ஐ கணக்கீட்டின் படி, 25க்கும் மேலாக உள்ளவர்கள் அதிக எடை உள்ளவர்களாக சொல்லப்படுகிறார்கள், மருத்துவப் புள்ளிவிவரப்படி, பி.எம்.ஐ 25 முதல் 30 வரை உள்ளவர்கள் 20 சதவிகிதமும், 30 முதல் 35 வரை உள்ளவர்கள் 70 சதவிகிதமும், 35 முதல் 40 வரை உள்ளவர்கள் 136 சதவிகிதமும், பி.எம்.ஐ 40க்கும் மேல் உள்ளவர்கள் 250 சதவிகிதமும் அதிக வலிகளால் அவதிப்படுகிறார்கள் என்பது தெரிகிறது.

உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு? உடல் பருமன் கூடக் கூட உடலில் ஒருவித ரசாயனம் சுரக்கும். அதுவே வலிகளை உண்டு பண்ணக் காரணம். உடல் எடை கூடினால், ஏற்கனவே உள்ள வலிகளோடு சேர்த்து, புதிய வலிகளும் அதிகமாக உணரப்படும். உடல் பருமனால் உணரப்படுகிற வலிகளில் முழங்கால் மூட்டு வலி, நரம்பு வலி, நீரிழிவு மற்றும் தைராய்டினால் உருவாகும் வலி, ஃபைப்ரோமையால்ஜியா எனப்படுகிற தசை வலி, இடுப்பு வலி போன்றவை அதிகமாக இருக்கும்.

அதிக எடையின் காரணமாக உண்டாகக் கூடிய முக்கியமான வலிகளில் மூட்டு வலியும் ஒன்று. உடல் எடை தாங்க முடியாமல் மூட்டுக்களில் தேய்மானம் ஏற்பட்டு, அங்கே வலியும் அதிகமாகும். எனவே உடல் பருமனும், வலிகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. வலி நிவாரண சிறப்பு சிகிச்சைகளின் மூலம் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். இந்த சிகிச்சைகளின் விளைவாக எடைக் குறைப்புக்கான உடல் பயிற்சிகளை வலியின்றி செய்ய முடியும்.

இந்த சிகிச்சையினால் ஏற்படுகிற வலி நிவாரணம் தற்காலிகமானது என்றாலும் வலியின்றி உடற்பயிற்சி செய்ய முடிவதானால் எடைக் குறைப்பு என்பது எளிதில் சாத்தியமாகும். எடை குறைவதால், வலிகளும் குறையும். இவை தவிர, சிறப்பு மருந்துகளும் இந்தப் பிரச்னைக்கு உதவும்.

நரம்புகளின் வலிகளை நீக்கும் மருந்துகள், ஊசிகள் மூலம் செலுத்தக் கூடிய மருந்துகள் போன்றவையும் இந்த சிகிச்சையில் அடக்கம். கால்சியம், வைட்டமின் டி 3 போன்றவற்றுக்கான மருந்துகளையும் இவர்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே உடல் பருமனையும், உடல் வலிகளையும் அலட்சியப்படுத்தாதீர்கள்...’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

PREV
click me!

Recommended Stories

Pulicha Keerai : புளிச்ச கீரைக்கு இவ்வளவு 'சக்தி' இருக்கு!! ஆண்களுக்கு 'கண்டிப்பா' தேவை
உப்பு vs சர்க்கரை! தயிரில் எதை கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது?