Myanmar Earthquake Explained
மியான்மர் நிலநடுக்கம்:
மியான்மரின் மண்டலே அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சுமார் 800 மைல்கள் (1,300 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள பாங்காக் வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கம் இரண்டு முக்கிய நகரங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
தலைநகர் நேபிடா மற்றும் பாங்காக்கில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மியான்மரில் உள்ள ஒரு பெரிய நில அதிர்வு மண்டலமான சாகைங் ஃபால்ட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் ஒப்பீட்டளவில் இந்த நிலநடுக்கம் ஆழமற்றதாகும். இதன் விளைவாக கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மியான்மரின் வலுவான நிலநடுக்க மண்டலத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் உள்ளனர் என மதிப்பிட்டுள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவும் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
Bangkok Myanmar Earthquake
ஆழமற்ற நிலநடுக்கம் எவ்வாறு ஏற்படுகிறது?
பூமியின் மேலோடு டெக்டோனிக் தட்டுகள் எனப்படும் பல பெரிய துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது. அவை ஒரு ஒன்றுக்கொன்று பொருந்திக்கொள்கின்றன. இந்தப் பிணைப்பு பெரும்பாலும் நிலையானது. ஆனால் அவை சில சமயங்களில் பிணைப்பிலிருந்து விலகிவிடுகின்றன. பல ஆண்டுகளில் இந்தத் தட்டுகளிடையே அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த அழுத்தம் ஏற்பட நூற்றாண்டுகள்கூட ஆகலாம். டெக்டோனிக் தட்டுகள் பிணைப்பிலிருந்து நகரும் அளவுக்கு அழுத்தம் உண்டாகும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது.
பூகம்பங்கள் பொதுவாக டெக்டோனிக் தட்டுகளின் விளம்புகளில் நிகழ்கின்றன. ஆனால் அவற்றின் தாக்கம் அதற்கு அப்பாலும் இருக்கும். கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கங்களை கவனிக்க முடியாமல் போகலாம். மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு அருகில் நிகழும் நிலநடுக்கங்கள் பெரும்பாலும் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும். முதன்மையாக இடிந்து விழும் கட்டிடங்களில் சிக்கிக்கொள்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
Myanmar Earthquake
நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியுமா?
பூகம்பங்கள் எங்கு ஏற்படக்கூடும் என்பதை விஞ்ஞானிகளால் தீர்மானிக்க முடியும். ஆனால் அவற்றின் சரியான நேரத்தைக் கணிக்க முடியாது. ஆனால், ஒரு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, ஏற்படும் பின்அதிர்வுகளை ஆராய்ச்சியாளர்கள் ஓரளவுக்குக் கணித்துக் கூறலாம். முதல் நிலநடுக்கத்தால் பூமியின் மேலோட்டில் ஏற்படும் அழுத்த மாற்றங்கள் காரணமாக தொடர்ந்து சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும்.
மியான்மர் பூகம்பத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, பார்க்கும்போது அடுத்த சில மாதங்களுக்கு பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Myanmar Earthquake
மியான்மர் நிலநடுக்க அபாயம் கொண்ட நாடாக இருப்பது ஏன்?
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள மியான்மர், புவியியல் ரீதியாக சிக்கலான பகுதியில் அமைந்துள்ளது. இது அந்தப் பிராந்தியத்தில் பூகம்பத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த மண்டலங்களில் ஒன்றான மியான்மர் நாட்டில், டெக்டோனிக் தகடுகள் மாறுவதால் ஏற்படும் பெரிய நிலநடுக்கங்கள் பல ஏற்பட்டுள்ளன. அந்தமான் மெகாத்ரஸ்டின் ஆழமான அசைவுகள், சாகாங் ஃபால்ட் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படக் காரணமாகின்றன.
மியான்மர் தீவிர நிலநடுக்கங்களுக்குப் பெயர் பெற்ற ஆல்பைட் பெல்ட் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் மியான்மரில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பேரழிவுகளை உண்டாக்குபவையாக உள்ளன.
Myanmar Earthquake
மியான்மர் நிலநடுக்கம்: முக்கியக் காரணிகள் எவை?
அந்தமான் மெகாத்ரஸ்ட் மண்டலம்: மியான்மர் நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள இந்த மண்டலத்தில், இந்திய நிலத்தட்டுகள் ஆண்டுக்கு 2–3.5 செ.மீ என்ற விகிதத்தில் நகர்கின்றன. அவை பர்மா நிலத்தட்டுக்கு அடியில் தள்ளப்படுகின்றன. இது காலப்போக்கில், இந்த டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமியைத் தூண்டக்கூடியது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுமத்ரா பூகம்பம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
சாகாங் ஃபால்ட் மண்டலம்: மத்திய மியான்மரில் உள்ள இந்தப் பகுதியில் நிகழும் மாற்றங்கள்தான் மியான்மர் நாட்டில் பெரிய நிலநடுக்கங்களுக்கு காரணமாகும். இது ஆழமற்ற குவிமையம் கொண்ட பூகம்பங்களை உருவாக்கக்கூடியது. இதனால், மக்கள்தொகை அடர்த்தி அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் அதிக சேதம் ஏற்படும்.
பழங்கால நிலஅதிர்வுகள் மற்றும் டெக்டோனிக் தட்டுகள் தொடர்பான சமீபத்திய ஆய்வுகள், சாகைங், கியூக்கியான் மற்றும் கபாவ் பிளவுகளின் செயலில் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டுள்ளன. இது தொடர்ச்சியாக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயத்தைக் குறிக்கிறது.