Published : Apr 22, 2025, 12:59 PM ISTUpdated : Apr 22, 2025, 01:11 PM IST
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார். போர்நிறுத்தம் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த தயார் என புடின் அறிவித்துள்ளார். இதற்கு ஜெலென்ஸ்கி நேரடியாக பதிலளிக்கவில்லை என்றாலும், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் போர்நிறுத்தம் குறித்த எந்தவொரு உரையாடலுக்கும் உக்ரைன் தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதல் முறையாக உக்ரைனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடந்த முன்வந்துள்ளார். திங்களன்று இதுபற்றி அறிவித்த புடின், உக்ரைன் அதிபல் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடந்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
புடினின் திட்டத்திற்கு ஜெலென்ஸ்கி நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் போர்நிறுத்தம் குறித்து எந்தவொரு உரையாடலுக்கும் உக்ரைன் தயாராக உள்ளது என தனது வீடியோ உரையில் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
26
Pressure from the United States
அமெரிக்கா கொடுத்த அழுத்தம்:
போர்நிறுத்தத்தை நோக்கி முன்னேற்றம் இல்லாவிட்டால், தற்போது மேற்கொண்டுவரும் அமைதிக்கான முயற்சிகளில் இருந்து அமெரிக்கா விலகிச் செல்வதாக எச்சரித்தது இரு தலைவர்களும் நேரடி பேச்சுவார்த்தைக்கு முன்வர அழுத்தம் ஏற்பட்டிருப்பதாகக் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
வார இறுதியில் ரஷ்யா அறிவித்த 30 மணி நேர ஈஸ்டர் போர்நிறுத்தத்திற்குப் பிறகு மேலும் போர்நிறுத்தங்களை அறிவிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யாவும் உக்ரைனும் தெரிவித்துள்ளன. அதே சமயத்தில் இருதரப்பினும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர்.
36
London Talks with U.S. and European countries
லண்டனில் பேச்சுவார்த்தை:
லண்டனில் புதன்கிழமை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்கும் என்று ஜெலென்ஸ்கி கூறினார். கடந்த வாரம் பாரிஸ் கூட்டத்தின் தொடர்ச்சியாக இந்த விவாதங்கள் நடைபெற உள்ளன. பாரிஸ் கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தன.
ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சி நிருபரிடம் பேசிய புடின், சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட ஈஸ்டர் போர் நிறுத்தத்திற்குப் பிறகு சண்டை மீண்டும் தொடங்கியதாகக் கூறினார். ரஷ்யா எந்தவொரு அமைதி முயற்சிக்கும் தயாராக இருக்கிறது என்றும், உக்ரைனில் இருந்து வரும் பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
“நாங்கள் எப்போதும் இதைப் பற்றிப் பேசி வருகிறோம், எந்தவொரு அமைதி முயற்சி குறித்தும் எங்களுக்கு நேர்மறையான அணுகுமுறை உள்ளது. உக்ரைன் பிரதிநிதிகளும் அவ்வாறே உணருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என புடின் கூறினார்.
46
Russia Ukraine Direct Talks
உக்ரைன் - ரஷ்யா இடையே முதல் அமைதிப் பேச்சுவார்த்தை:
பிப்ரவரி 2022 இல் ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை இரு தரப்பினருக்கும் இடையே போர்நிறுத்தம் குறித்து நேரடிப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவே இல்லை. இச்சூழலில் புடின் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருப்பது புதிய திருப்பமாக அமைந்துள்ளது.
புடின் பேச்சைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோ உரையில், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் உக்ரைன் உறுதியாக இருப்பதாகவும், அதற்காக எந்த வகையான விவாதத்திற்கும் தயாராக இருப்பதாகவும் கூறினார். ஏற்கெனவே, அமெரிக்காவும் உக்ரைனும் 30 நாள் போர்நிறுத்தத்திற்கு முன்மொழிந்திருந்தன.
“உக்ரைன் குறைந்தபட்சம் பொதுமக்களைத் தாக்கக்கூடாது என்ற தனது திட்டத்தைத் தொடர்கிறது. இது குறித்த எந்தவொரு உரையாடலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
56
Unconditional Ceasefire
நிபந்தனையற்ற போர்நிறுத்தம் கோரும் உக்ரைன்:
லண்டன் பேச்சுவார்த்தையில் முக்கியமான பணி நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுப்பதுதான் என்றும் அதுவே நிரந்தரமான அமைதிக்குத் தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். உண்மையான மற்றும் நீடித்த அமைதியை நிறுவுவதற்கு நிபந்தனையற்ற போர் நிறுத்தம் தேவை என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தி வருகிறார்.
ஈஸ்டர் வார இறுதி போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. ஈஸ்டர் போர் நிறுத்தத்தின்போதும் ரஷ்ய தாக்குதல்களைத் தொடர்வது, ரஷ்யா போரை நீடிக்க விரும்புகிறது என்பதைக் குறிப்பதாகும் என ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்ய ராணுவத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து பிரதிபலிக்க உக்ரைனின் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.
66
Russia’s demands for permanent neutrality
போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா விதிக்கும் நிபந்தனை:
அமைதிப் பேச்சுவார்த்தையில் இன்னும் சில நாட்களுக்குள் முன்னேற்றம் இல்லாவிட்டால், அமெரிக்கா தனது முயற்சிகளைக் கைவிடக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இருவரும் வெள்ளிக்கிழமை கூறினர். ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் மிகவும் நம்பிக்கை தரும் செய்தியை வெளியிட்டார். இரு தரப்பினரும் இந்த வாரம் ஒரு ஒப்பந்தத்திற்கு முன்வருவார்கள் என்று அவர் கூறினார்.
ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அதிபர் புடினால் அறிவிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது ரஷ்யா முன்வைக்கும் முக்கிய நிபந்தனையாக உள்ளது. ஆனால், இதனை ஏற்க மறுக்கும் உக்ரைன், ரஷ்யாவின் நிபந்தனையை ஏற்பது முழுமையாக அவர்களிடம் சரணடைவதற்குச் சமம் என்றும், மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும் என்றும் சொல்கிறது.