
வாரத்திற்கு 6 நாளும் மாடாய் உழைத்து, ஒரே ஒரு நாள் லீவுலயும் துணி துவைச்சே நேரம் போயிடுது... என்று புலம்பும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு பிரேசிலில் இருந்து கனவுத் திட்டம் நனவாகி வந்துள்ளது. அந்நாட்டின் நாடாளுமன்றம் வாராந்திர வேலை நேரத்தை 44 மணி நேரத்தில் இருந்து 40 மணி நேரமாக குறைத்து, சம்பளத்தில் 1 பைசா கூடக் குறைக்காமல் வாரம் 2 நாட்கள் முழு விடுமுறையை உறுதி செய்யும் வரலாற்று சிறப்புமிக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 3 கோடிக்கும் அதிகமான உழைக்கும் வர்க்கத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விடப்போகிறார்கள்.
பிபிசி தகவல்களின்படி, கடந்த 1988-ம் ஆண்டிற்குப் பிறகு பிரேசில் தொழிலாளர் வரலாற்றில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய புரட்சி இதுவாகும். கடந்த மே மாதம் கீழவையில் வெற்றிபெற்ற இந்த மசோதாவிற்கு, செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 75 உறுப்பினர்கள் ஆதரவாகவும், வெறும் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
அக்டோபர் 25 அன்று நடைபெறவிருக்கும் பிரேசில் அதிபர் தேர்தலின் இறுதிச் சுற்றுக்கு (Run-off) முன்னதாக, இந்த விவகாரம் அனல் பறக்கும் அரசியல் களமாக மாறியுள்ளது. தற்போதைய அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிற்கும், வலதுசாரி வேட்பாளரான ஃபிளாவியோ போல்சனாரோவிற்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது.
முதல் சுற்றில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மகனான ஃபிளாவியோ 47% வாக்குகளையும், அதிபர் லுலா 45.2% வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆரம்பத்தில், இது தேர்தல் லாபத்திற்காகச் செய்யப்படும் கபட நாடகம் என்று இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்த ஃபிளாவியோ போல்சனாரோ, கடைசியில் ஊழியர்களின் ஏகோபித்த ஆதரவைப் பார்த்து அந்தர்பல்டி அடித்து ஆதரவாக வாக்களித்துள்ளார்.
பெரும்பாலான பிரேசில் தொழிலாளர்கள் வாரத்திற்கு 6 நாள் வேலை செய்யும் முறையை ஒழிக்க நினைக்கிறார்கள்; அதனால் நான் இதற்கு ஆதரவாக வாக்களிக்கிறேன் என்று போல்சனாரோ பவ்யமாகத் தெரிவித்தார். ஆனால், அவரது இந்தத் திடீர் மனமாற்றத்தை அப்பட்டமான தேர்தல் சந்தர்ப்பவாதம் என அதிபர் லுலா பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
மசோதா நிறைவேறியதும் அதிபர் லுலா தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். இதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? மனிதர்கள் வாழ்வதற்கும், நிம்மதியாக ஓய்வெடுப்பதற்கும், குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்கும், குழந்தைகள் கண்முன்னே வளர்வதைப் பார்த்து ரசிப்பதற்கும், தங்களைப் பராமரித்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் கூடுதல் நேரம் கிடைப்பதுதான் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புதிய நடைமுறை தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி தராத வகையில் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. முதல் 2 மாத காலத்திற்குப் பிறகு, வாராந்திர வேலை நேரம் 42 மணி நேரமாகக் குறைக்கப்படும். அதிலிருந்து ஓராண்டு கழித்து, முழுமையாக 40 மணி நேரமாக குறைக்கப்பட்டு, 2 நாள் விடுமுறை கட்டாயமாக்கப்படும்.
ரியோ டிஜெனிரோவில் சூப்பர் மார்க்கெட் கேஷியராக வேலை பார்த்துக்கொண்டே, கணவரின்றி தனியாக 3 பெண் குழந்தைகளை வளர்த்து வரும் 36 வயதான லூசியானா டி அல்மேடாவின் வார்த்தைகள் இந்தச் சட்டத்தின் அவசியத்தை உணர்த்துகின்றன. வாரத்துல 6 நாள் வேலை. கிடைக்கிற ஒரே ஒரு நாளும் வீட்டு வேலைகளைப் பார்த்து முடிக்கவே போதாது. உடம்பும், குறிப்பா என் மனசும் ரொம்பவே களைத்துப் போய் விட்டது.
என் பொண்ணுங்களோட நேரம் செலவழிக்கவும், கொஞ்சம் மனமகிழ்ச்சியோடு இருக்கவும், இல்லன்னா வீட்ல சும்மாவாவது படுத்து ஓய்வெடுக்கவும் எனக்கு நேரம் வேணும். இந்த சட்டம் என் வாழ்க்கையில பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நாடு தழுவிய கருத்துக் கணிப்பில் 70% மக்கள் வேலை நேரக் குறைப்புக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இயந்திரமயமாகிப் போன நவீன வாழ்க்கையில், மனிதர்களுக்கு அவர்களின் வாழ்க்கையையே மீட்டுக் கொடுக்கும் ஒரு சீர்திருத்தமாக இது பார்க்கப்படுகிறது.