அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு வாஷிங்டன் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வெள்ளை மாளிகை சென்றுள்ளார். அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவியும் அமெரிக்க முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். இதையடுத்து, அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் அரசு சார்பில் இரவு விருந்து அளிக்கவுள்ளனர்.
முன்னதாக, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோருக்கு பிரதமர் மோடி சிறப்பு பரிசுகளை வழங்கினார். அதன்படி, அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட 7.5 காரட் பச்சை வைரத்தை பிரதமர் மோடி பரிசாக அளித்தார். இந்த வைரம் பூமியில் வெட்டப்பட்ட வைரங்களைப் போன்றே அதன் இரசாயன மற்றும் ஒளியியல் பண்புகளை பிரதிபலிக்கிறது. சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்றவை இந்த வைரத்தின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரம் மற்றும் நிலையான சர்வதேச உறவுகளை குறிக்கும் வகையில் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு 7.5 காரட் பச்சை வைரத்தை பரிசாக வழங்கியுள்ளார். குறிப்பாக, இந்த வைரம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது
கரேகாலம்தானி காஷ்மீர் என அழைக்கப்படும் பேப்பியர் மாச்சே எனும் பெட்டகத்தில் இந்த வைரமானது வைக்கப்பட்டுள்ளது. இந்த பேப்பியர் மாச்சே காஷ்மீரின் நேர்த்தியான கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. காகிதக் கூழ் மற்றும் நக்காஷி கொண்டு இதன் வடிவமைப்புகள் வரையப்பட்டுள்ளன.
அதேபோல், லண்டனின் ஃபேபர் அண்ட் ஃபேபர் லிமிடெட் வெளியிட்டு, கிளாஸ்கோ பல்கலைக்கழக அச்சகத்தில் அச்சிடப்பட்ட ‘பத்து முதன்மை உபநிடதங்கள்’ புத்தகத்தின் முதல் பதிப்பின் பிரதியை பிரதமர் மோடி அதிபர் ஜோ பைடனுக்கு வழங்கினார். 1937 ஆம் ஆண்டில் ஸ்ரீ புரோஹித் சுவாமியுடன் இணைந்து எழுதிய இந்திய உபநிடதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை WB யீட்ஸ் வெளியிட்டார். இரண்டு ஆசிரியர்களுக்கிடையேயான மொழிபெயர்ப்பு மற்றும் ஒத்துழைப்பு 1930கள் முழுவதும் நிகழ்ந்தது, இது யீட்ஸின் இறுதிப் படைப்புகளில் ஒன்றாகும்.
மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சிறப்பு சந்தனப் பெட்டி ஒன்றையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார். கர்நாடகாவின் மைசூரில் இருந்து பெறப்பட்ட சந்தன மரங்களை கொண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தலைசிறந்த கைவினைஞர் ஒருவர் தனது கையாலேயே அந்த சந்தனப் பெட்டியை வடிவமைத்துள்ளார். தாவரங்கள், பறவைகள், விலங்கினங்களின் வடிவங்கள் அதில் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன.
அந்த பெட்டியில் இந்துக் கடவுளான விநாயகரின் வெள்ளி சிலை, வெள்ளை எண்ணெய் விளக்கு ஆகியவை உள்ளன. கொல்கத்தாவைச் சேர்ந்த ஐந்தாம் தலைமுறை வெள்ளித் தொழிலாளிகளின் குடும்பத்தால் இந்த சிலை, விளக்கு கைவினைப்பொருளாக தயாரிக்கப்பட்டுள்ளது.
'சஹஸ்ர பூர்ண சந்திரோதயம்' கொண்டாட்டங்களின் போது, பத்து வகையான தானங்கள் அதில் உள்ளன. கௌடன் (பசு), பூடான் (நிலம்), தில்டான் (எள் விதைகள்), ஹிரண்யதன் (தங்கம்), அஜ்யதன் (நெய் அல்லது தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்), தான்யாதன் (உணவு தானியங்கள்), வஸ்த்ரதன் (ஆடைகள்), குடான் (வெல்லம்), ரௌப்யதான் (வெள்ளி) மற்றும் லவண்டான் (உப்பு) ஆகியவை அதில் அடங்கும். இதனை குறிக்கும் வகையில், ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி பரிசளித்த பெட்டியில் பத்து நன்கொடைகள் உள்ளன. எள் தானத்தை குறிக்கும் வெள்ளை எள், தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்டு அந்த பெட்டியில் வைக்கப்பட்டு பைடனுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு பொருளும் அதற்கு பெயர் போன இடங்களில் இருந்து பெறப்பட்டு பரிசளிக்கப்பட்டுள்ளது.