விண்வெளிக்கு பட்டர் சிக்கன், மட்டன் குருமா எடுத்துச் சென்ற பாகிஸ்தான் வீரர்: சீனாவின் தியாங்காங் நிலையத்தில் 100 ஹலால் உணவு விருந்து!

Published : Nov 26, 2026, 07:46 PM IST

சீனாவின் 'தியாங்காங்' விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீரர் முகமது ஜீஷான் அலிக்காக, பட்டர் சிக்கன், மட்டன் குருமா, பீஃப் நிஹாரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஹலால் உணவு வகைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

PREV
13
விண்வெளிக்கு உணவு எடுத்து சென்ற பாகிஸ்தான் வீரர்!

சீனாவின் 'தியாங்காங்' (Tiangong) விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள பாகிஸ்தான் விண்வெளி வீரருக்காக, பட்டர் சிக்கன், மட்டன் குருமா (Lamb Korma) மற்றும் பீஃப் நிஹாரி (Beef Nihari) உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஹலால் (Halal) உணவு வகைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

விண்வெளியில் மிதந்தபடியே விண்வெளி வீரர்கள் இந்தச் சிறப்பு உணவுகளைச் சுவைக்க உள்ளனர். பாகிஸ்தானிலிருந்து விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரரான முகமது ஜீஷான் அலி (Muhammad Zeeshan Ali), புதன்கிழமை 'ஷென்சோ-24' (Shenzhou-24) விண்கலம் மூலம் தியாங்காங் விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தார். அங்கு ஏற்கனவே 'ஷென்சோ-23' (Shenzhou-23) திட்டத்தின் கீழ் தங்கி இருக்கும் 3 சீன விண்வெளி வீரர்களுடன் அவர் இணைந்துள்ளார்.

மொத்தமுள்ள 6 விண்வெளி வீரர்களும் விண்வெளி சுற்றுப்பாதையில் ஒன்றாகச் சேர்ந்து ஒரு சிறப்பு இரவு விருந்தில் (Special Dinner) பங்கேற்க உள்ளனர். முகமது ஜீஷான் அலியின் உணவு விருப்பங்கள், உணவு கட்டுப்பாடுகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்தப் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் ஒரு விருந்தினர் விண்வெளி வீரருக்காக இத்தகைய பிரத்யேக உணவு ஏற்பாடுகள் செய்யப்படுவது மிகவும் அரிதான ஒன்றாகும்.

23
100-க்கும் மேற்பட்ட ஹலால் உணவு வகைகள்!

மிகவும் நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட இந்த உணவுப் பட்டியலில் பாகிஸ்தானியர்களின் விருப்ப உணவுகளான பீஃப் நிஹாரி, மட்டன் குருமா, கொண்டைக்கடலை மசாலா (Curried Chickpeas) மற்றும் பட்டர் சிக்கன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த உணவுப் பட்டியலைத் தயாரிக்க, ஆராய்ச்சியாளர்கள் பாகிஸ்தானியர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர். மேலும், மஞ்சள் மற்றும் கறிமசாலா போன்ற மசாலாப் பொருட்கள் மீதான அலியின் விருப்பத்தையும் உணவுத் தயாரிப்புக் குழு கருத்தில் கொண்டது. விண்வெளிக்குச் சென்ற முதல் சில நாட்களில் எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும், இலகுவானதாகவும் இருப்பதோடு, போதிய ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் வழங்கும் வகையில் இந்த உணவுகள் திட்டமிடப்பட்டதாக சீன விண்வெளி வீரர்கள் மையத்தின் (China Astronaut Centre) ஆராய்ச்சியாளர் சென் ஜுன்லி (Chen Junli) தெரிவித்தார்.

மேலும், இந்த உணவுகள் தயாரிக்கப்பட்ட முழுச் செயல்முறையும் இஸ்லாமிய உணவு விதிமுறைகளின்படி 'ஹலால்' முறையைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டது. உணவுக்கான மூலப்பொருட்கள் மற்றும் சமைக்கும் முறைகள் அதற்கேற்பத் தேர்ந்தெடுக்கப்பட்டன. பாகிஸ்தான் விண்வெளி வீரர்களின் கருத்துக்களின் அடிப்படையில் சுவை பரிசோதனைகள் பலமுறை நடத்தப்பட்டு சமையல் முறைகள் மாற்றியமைக்கப்பட்டன.

33
விண்வெளியில் 6 பேருக்கான சிறப்பு இரவு விருந்து!

ஷென்சோ-23 மற்றும் ஷென்சோ-24 ஆகிய இரு குழுக்களையும் ஒன்றிணைக்கும் இரவு விருந்தில் இந்தப் பிரத்யேக உணவுகள் பரிமாறப்பட உள்ளன. இதன் மூலம் வெவ்வேறு உணவுப் பழக்கங்களைக் கொண்ட விண்வெளி வீரர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்த முடியும். எந்தவொரு விண்வெளிப் பயணத் திட்டத்திலும் உணவு என்பது மிக முக்கியமான பகுதியாகும்.

விண்கலம் அல்லது விண்வெளி நிலையத்தில் வழக்கமான முறையில் சமைக்க முடியாது என்பதால், உணவுகள் பூமியிலேயே தயாரிக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட பிறகு விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றன. விண்வெளியில் தங்கியிருக்கும் காலத்தில் வீரர்கள் ஆரோக்கியமாக இருக்கத் தேவையான ஊட்டச்சத்தையும் இவை வழங்க வேண்டும்.

40 வயதான விமானி முகமது ஜீஷான் அலியின் இந்தப் பயணம், சீனா-பாகிஸ்தான் விண்வெளி ஒத்துழைப்பில் மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இதன் மூலம் தியாங்காங் விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் பாகிஸ்தானியர் மற்றும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையை அலி பெற்றுள்ளார். அவர் விண்வெளியில் 5 முதல் 10 நாட்கள் தங்கியிருந்து அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபட்ட பிறகு, ஷென்சோ-23 விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்ப உள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories