Pakistan threatens nuclear weapons attack on India: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயாராகி உள்ள நிலையில், அந்த நாட்டின் தலைவர்கள் பதற்றத்தில் ஏதேதோ பேசி வருகின்றனர். இந்தியா தாக்குதல் நடத்தினால் மறுபடி தாக்குவோம் என பூச்சாண்டி காட்டி வருகிறது. அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்து வருகிறது.
24
இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான்
இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி, இந்தியா தாக்கினால் தங்கள் நாடு அணு ஆயுதங்கள் உட்பட தனது முழு பலத்தையும் பயன்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பபாக பேசிய முகமது காலித் ஜமாலி, இந்தியா பாகிஸ்தானின் சில பகுதிகளைத் தாக்கப் போவதாகக் கசிந்த சில ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகக் கூறினார்.
"இந்தியா மற்றும் பாகிஸ்தான் விஷயத்தில் எண்ணிக்கை பற்றிய விவாதத்தில் ஈடுபட நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பலத்தின் முழு சக்தியையும் நாங்கள் பயன்படுத்துவோம். இதில் வழக்கமான மற்றும் அணு ஆயுதங்கள் இரண்டும் அடங்கும்" என்று முகமது காலித் ஜமாலி கூறினார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவை சீண்டுவதை பாகிஸ்தான் தலைவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
34
இந்தியா-பாகிஸ்தான் மோதல்
ஏற்கெனவே பாகிஸ்தான் அமைச்சர் ஹனீஃப் அப்பாசி, இந்தியாவுக்கு அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதாக வெளிப்படையாக மிரட்டல் விடுத்தார். ''கௌரி, ஷாஹீன் மற்றும் கஜ்னவி ஏவுகணைகள் உட்பட 130 அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளன'' என்றார். ''இவை "இந்தியாவிற்கு மட்டுமே" வைக்கப்பட்டுள்ளன. சிந்து நதி நீர் விநியோகத்தை இந்தியா குறைத்தால், அது போருக்குத் தயாராக இருக்க வேண்டும்'' என்று கூறினார்.
பாகிஸ்தானின் மற்றொரு அமைச்சர் அட்டாவுல்லா தாரர், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்கக்கூடும் என்ற உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாகக் கூறினார். முன்னதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், ''இந்தியாவிடம் இருந்து எங்கள் படைகளுக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே எங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்'' என்று தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.இதனால் அந்த நாட்டுக்கு பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்ந்த பாகிஸ்தான் தலைவர்கள் வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டி வருகின்றனர். பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்ட்டியின் தலைவருமான பிலாவல் பூட்டோ, ''சிந்து நதியில் இருந்து எங்களுக்கான நீர் பாய வேண்டும். இல்லாவிடில் அவர்களது ரத்தம் பாயும்'' என்று கூறியிருந்தார். இதற்கு இந்தியா தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.