17 ஆண்டுக்குப் பின் நாடுதிரும்பிய தாரிக் ரஹ்மான்! வங்கதேச அரசியலில் பரபரப்பு!

Published : Dec 25, 2025, 10:08 PM IST

சுமார் 17 ஆண்டுகால லண்டன் வாசத்திற்குப் பிறகு, வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் நாடு திரும்பியுள்ளார். இவரது வருகை 2026 தேர்தலுக்கான அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

PREV
15
நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பிஎன்பி (BNP) கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான், சுமார் 17 ஆண்டுகால லண்டன் வாசத்தை முடித்துக்கொண்டு இன்று (வியாழக்கிழமை) தாய்நாடு திரும்பினார்.

25
மண்ணைத் தொட்டு வணங்கிய தாரிக்

லண்டனில் இருந்து விமானம் மூலம் டாக்கா வந்திறங்கிய தாரிக் ரஹ்மான், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் தனது காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு, வெறுங்காலுடன் தாய்மண்ணில் கால் பதித்தார். பின்னர் ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து நெற்றியில் ஒற்றிக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டார்.

இவருடன் மனைவி ஜுபைதா மற்றும் மகள் ஜைமா ஆகியோரும் வந்திருந்தனர். இவர்களை பிஎன்பி பொதுச்செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

35
"எனக்கும் ஒரு பிளான் இருக்கு!"

டாக்காவில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் ஆவேசமாகப் பேசிய தாரிக் ரஹ்மான், அமெரிக்கக் கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற உரையை நினைவுகூர்ந்தார்.

"மார்ட்டின் லூதர் கிங் 'எனக்கொரு கனவு உண்டு' (I have a dream) என்றார். அதுபோல, வங்கதேசத்திற்காக 'என்னிடம் ஒரு திட்டம் (Plan) உண்டு' என்று நான் கூறுகிறேன். அது மக்களின் தலைவிதியை மாற்றும் திட்டம்," எனக் குறிப்பிட்டார்.

மேலும், "வங்கதேசம் 1971-ல் ஒருமுறை விடுதலை பெற்றது. பின்னர் 2024 ஜூலையில் மாணவர்களின் புரட்சி மூலம் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியாதால், நாடு இரண்டாவது முறையாக விடுதலை பெற்றுள்ளது” எனக் கூறினார்.

45
இந்தியாவின் கோரிக்கை

சமீபத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் அணித் தலைவர் சரீப் உஸ்மான் ஹாடி மர்ம நபர்களால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாரிக் ரஹ்மான் தனது உரையில் ஹாடியின் தியாகத்தைப் புகழ்ந்து பேசினார். இதற்கிடையில், இந்த கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகப் பரவும் வதந்திகளால் அங்கு இந்திய எதிர்ப்பு உணர்வு எழுந்துள்ளது. இதனால், இந்த மரணம் குறித்துத் தீர விசாரிக்க வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

55
17 ஆண்டுகால வனவாசம் ஏன்?

2008-ம் ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில், பல்வேறு ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்ட தாரிக் ரஹ்மான், அரசியல் பழிவாங்கல் காரணமாக லண்டனுக்குச் சென்றார். அங்கு 17 ஆண்டுகள் சுயமாக நாடுகடத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்த அவர், தற்போது ஹசீனா ஆட்சி வீழ்ந்த பிறகு நாடு திரும்பியுள்ளார்.

2026 தேர்தல் வரும் 2026 பிப்ரவரி 12-ம் தேதி வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தாரிக் ரஹ்மான் பிரதமர் வேட்பாளராகக் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்குப் போட்டியாக ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியும் தீவிரம் காட்டி வருவதால், வங்கதேச அரசியல் களம் தற்போது தகிக்கத் தொடங்கியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories