அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சதியால் போராட்டம் தூண்டி விடப்படுவதாகவும், போராடுபவர்கள் மீது மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஈரான் மக்களுக்கு அமெரிக்கா உதவ தயாராக உள்ளது என்று டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஈரானில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ளது.
மேலும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஈரானி உச்ச தலைவரும், மதத் தலைவருமான அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
24
மரண தண்டனை விதிக்கப்படும்
பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில் பலர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சதியால் போராட்டம் தூண்டி விடப்படுவதாகவும், போராடுபவர்கள் மீது மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், ஈரான் மக்கள் சுதந்திரத்தை எதிர்பார்க்கின்றனர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
34
ஈரான் பிரச்சனையில் தலையிடுவோம்
இது தொடர்பாக ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஈரான் இதற்கு முன் இல்லாத வகையில் சுதந்திரத்தை எதிர்பார்க்கிறது. அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது" என்று கூறியுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் ஈரானில் நிலைமை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அந்நாட்டில் உள்ள போராட்டக்காரர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புவதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.
"ஈரான் பெரிய சிக்கலில் உள்ளது. சில நகரங்களை மக்கள் கைப்பற்றுவது போல் எனக்குத் தெரிகிறது. நாங்கள் நிலைமையை மிகவும் கவனமாகப் பார்க்கிறோம். கடந்த காலத்தைப் போல அவர்கள் மக்களைக் கொல்லத் தொடங்கினால், நாங்கள் தலையிடுவோம் என்று நான் மிகவும் வலுவாகக் கூறினேன்.
ஏனெனில் ஈரானில் நடப்பது மிகவும் நம்பமுடியாத ஒன்று. மக்கள் போராடுவது ஒரு அற்புதமான விஷயம். அரசு தங்கள் மக்களை மிகவும் மோசமாக நடத்தியுள்ளது. இப்போது அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள், எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நாங்கள் அங்குள்ள நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்" என்று டிரம்ப் தெரிவித்து இருந்தார்.