டிரம்பின் மூக்கை அறுத்த ஈரான்..! - அமெரிக்காவின் கண்முன்னே வேட்டை..!

Published : Mar 21, 2026, 06:01 PM IST

ஈரானின் இந்த 'எண்ணெய் ராஜதந்திரம்' அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய தலைவலியை உருவாக்கியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியைத் தனது போர் ஆயுதமாக மாற்றியுள்ள ஈரான், உலக நாடுகளின் எரிசக்தித் தேவையைத் தனது பிடிக்குள் வைத்துள்ளது.

PREV
14
அமெரிக்காவிற்கு விடப்பட்ட நேரடி சவால்

சர்வதேச அரசியலில் வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் வகையில் ஈரான் கையாண்டு வரும் 'எண்ணெய் ராஜதந்திரம்' உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியிலும், உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, தனது எண்ணெய் வணிகத்தையும் தங்குதடையின்றி ஈரான் நடத்தி வருவது அமெரிக்காவிற்கு விடப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.

24
ஈரானின் பிடியில் உலகப் பொருளாதாரம்!

உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. இந்தப் போர் தொடங்கும் போது, ஈரான் தனது பொருளாதார நலன்களுக்காக இந்த வழித்தடத்தை மூடத் துணியாது என்று அமெரிக்கா கணக்கு போட்டது. ஆனால், ஈரானோ அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு இந்தச் சாலையை முற்றிலுமாக மூடிவிட்டு, தனது எண்ணெய்க் கப்பல்களை மட்டும் தடையின்றி இயக்கி வருகிறது.

பிப்ரவரி 28 முதல் இந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சுமார் 16-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதில் பல தாக்குதல்களுக்கு ஈரானே பகிரங்கமாகப் பொறுப்பேற்றுள்ளது. இதன் விளைவாக, பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானின் கச்சா எண்ணெய் மட்டும் எவ்வித தடையுமின்றி உலகச் சந்தைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

34
அமெரிக்காவின் மௌனம்... ஈரானின் பில்லியன் டாலர் வேட்டை

மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஈரானின் கடற்படையின் பெரும்பகுதியைச் சிதைத்துவிட்டதாகக் கூறும் அமெரிக்கா, ஈரானிய எண்ணெய்க் கப்பல்களை மட்டும் ஏன் இடைமறிக்கவில்லை என்பதுதான். செயற்கைக்கோள் தரவுகளின்படி, போர் தொடங்கிய முதல் இரண்டு வாரங்களிலேயே ஈரான் சுமார் 13.7 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது.

அதாவது, ஒரு நாளைக்குச் சுமார் 1 மில்லியன் பீப்பாய்கள் என்ற வீதத்தில் ஈரான் பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டி வருகிறது. இந்த வருமானம் ஈரானின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதோடு, போருக்கான செலவுகளையும் ஈடுகட்ட உதவுகிறது. ஈரானின் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் குழாய் வழிகளைத் தாக்குவதை அமெரிக்கா தவிர்த்து வருவது, ஒருவேளை எண்ணெய் சந்தையில் ஏற்படும் கடும் விலை ஏற்றத்தைத் தவிர்க்க அமெரிக்கா எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

44
தோற்றுப்போன அமெரிக்கத் தடைகள்

கடந்த ஆண்டு ஈரானின் சராசரி ஏற்றுமதி 1.69 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது. தற்போதைய போர்ச் சூழலிலும் அந்த எண்ணிக்கையை ஒட்டியே ஏற்றுமதி நடைபெறுவது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் ஈரானிடம் தோற்றுப்போயுள்ளதைக் காட்டுகிறது. இஸ்ரேலியத் தாக்குதல்கள் தெஹ்ரானைச் சுற்றியுள்ள சேமிப்புக் கிடங்குகளைச் சேதப்படுத்தினாலும், சர்வதேச சந்தைக்குச் செல்லும் ஈரானின் 'கருப்புத் தங்கம்' மட்டும் இன்னும் யாராலும் நிறுத்த முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

ஈரானின் இந்த 'எண்ணெய் ராஜதந்திரம்' அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய தலைவலியை உருவாக்கியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியைத் தனது போர் ஆயுதமாக மாற்றியுள்ள ஈரான், உலக நாடுகளின் எரிசக்தித் தேவையைத் தனது பிடிக்குள் வைத்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ பலம் ஒருபுறம் இருந்தாலும், ஈரானின் பொருளாதாரத் தந்திரம் அந்த பலத்தையே கேள்விக்குறியாக்கி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories