
நார்வேயில் 15 ஆண்டுகள் வசித்து வந்ததாகவும், அங்கு 47% வரை வரி செலுத்தியதாகவும் வினோத் என்ற நபர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மானிய விலையிலான மருத்துவம், இலவசக் கல்வி, ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு மற்றும் வேலையின்மை உதவித்தொகை என அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை அப்பதிவில் பட்டியலிட்டுள்ளார். நார்வே நாட்டின் அதிகப்படியான வரிகளையும், அதற்குப் பதிலாகக் குடியிருப்பாளர்களுக்குக் கிடைக்கும் பொதுச் சேவைகள் மற்றும் சலுகைகளையும் ஒப்பிட்டு அவர் வெளியிட்ட இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
வினோத்தின் கூற்றுப்படி, நார்வேயில் முதுகலை படிப்பு வரை கல்வி முற்றிலும் இலவசம். மேலும், மருத்துவமனைக் கட்டணம் ரூ.1 லட்சமாக இருந்தாலும் சரி, ரூ.10 கோடி இருந்தாலும் சரி, குடியிருப்பாளர்கள் எதையும் செலுத்த வேண்டியதில்லை. 18 வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கம் ஆண்டுக்குச் சுமார் ரூ.2.3 லட்சம் வரியில்லாத உதவித்தொகையாகப் பெற்றோருக்கு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாய்மார்கள் முழுச் சம்பளத்துடன் ஓராண்டு மகப்பேறு விடுப்பும், தந்தையர்கள் நான்கு மாதங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பும் எடுத்துக்கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், பணியாளர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர்கள் குணமடையும் வரை முதல் நாளிலிருந்தே முழுச் சம்பளமும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வேலையை இழப்பவர்களுக்குப் புதிய வேலை கிடைக்கும் வரை அரசாங்கம் நிதியுதவி வழங்குவதாகவும் வினோத் குறிப்பிட்டுள்ளார். கோடைக்காலத்தில் ஒரு மாத ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மலைகள், காடுகள், கடல் மற்றும் பனிப் பள்ளத்தாக்குகளை (Fjords) அணுகும் வசதி ஆகியவற்றையும் அவர் சலுகைகளாகப் பட்டியலிட்டுள்ளார்.
அந்நாட்டின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி விவரித்த அவர், சுத்தமான காற்று, குழாய் நீர், தூய்மையான சாலைகள், மின்சார கார்கள், குறைந்த மாசுபாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார். மேலும், நார்வேயின் ஓய்வூதிய நிதியில் ஒவ்வொரு நபருக்கும் ரூ.3.6 கோடி அளவுக்குப் பங்கு இருப்பதாகவும், ஓய்வு பெற்ற பிறகு குடியிருப்பாளர்களுக்கு முழு ஓய்வூதியம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஈடாக, 47% வரை வரி செலுத்துவதும், குளிர்காலத்தில் மாலை 3.30 மணிக்கே இருட்டிவிடும் குறுகிய பகல் பொழுதுகளை எதிர்கொள்வதுமே அங்குள்ள சவால்கள் என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், நார்வேயின் கோடைக்காலம் சொர்க்கம் போல இருக்கும் என்றும், 'நார்தர்ன் லைட்ஸ்' (Northern Lights) எனப்படும் துருவ ஒளியும் பனிப்பொழிவும் அந்நாட்டின் முக்கிய ஈர்ப்புகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது பதிவின் இறுதியில், இப்போது கேள்வி என்னவென்றால்... இந்தியாவில் நாம் எவ்வளவு வரி செலுத்துகிறோம், அதற்குப் பதிலாக நமக்கு என்ன திரும்பக் கிடைக்கிறது? என்று வினோத் கேள்வி எழுப்பியுள்ளார்.
வினோத்தின் இந்தப் பதிவுக்குக் கலவையான எதிர்வினைகள் கிடைத்துள்ளன. இந்தியாவின் பொதுச் சேவைகள் குறித்த விமர்சனத்தைச் சில பயனர்கள் ஆமோதித்தாலும், நார்வேயின் பொருளாதார நிலை மற்றும் வரலாற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் வாதிட்டனர்.
நார்வே எண்ணெய் பணத்தில் மிதக்கும் ஒரு எரிசக்தி வல்லரசு. அது இதற்கு உதவுகிறது. ஆனால் அது மட்டுமே முழுக்கதையல்ல. எந்தவொரு வளர்ந்த நாடும் ஒரே இரவில் பணக்கார நாடாக மாறிவிடவில்லை. பல தலைமுறைகள் உழைத்து, கட்டமைப்புகளை உருவாக்கி, ஒவ்வொரு பிரச்னையையும் அடுத்தவர் வேலை என்று தட்டிக்கழிக்காமல் இருந்ததாலே இது சாத்தியமானது என்று நார்வேயின் எண்ணெய் வளத்தைச் சுட்டிக்காட்டி ஒரு பயனர் பதிலளித்துள்ளார். மற்றொருவர் இந்தியாவின் வரி முறை குறித்த தனது விரக்தியை வெளிப்படுத்தி, இந்தியாவில் நீங்கள் வரி செலுத்துபவராக இருந்தால், வரியைக் கட்டிவிட்டு மறந்துவிடுங்கள்... கேள்வி கேட்காதீர்கள்... அடிப்படையில் இது கடினமாக உழைப்பவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை என்று பதிவிட்டுள்ளார்.
வேறுபட்ட கருத்தைப் பதிவிட்ட 3-வது பயனர், நார்வேயில் மகிழ்ச்சியாக இருங்கள், அங்கேயே நிரந்தரமாக வாழுங்கள். இந்தியாவில் எங்களுக்குக் கிடைப்பதை வைத்து நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இங்கு என்ன கிடைக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு நேரத்தை வீணடிக்க மாட்டோம். நானும் 12 ஆண்டுகள் பல்வேறு வெளிநாடுகளில் வசித்தவன் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
வினோத்தின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சில சலுகைகள் நார்வேயின் சமூகப் பாதுகாப்பு அமைப்பைப் பொதுவாகப் பிரதிபலித்தாலும், பல தகவல்களுக்குத் துல்லியமான விளக்கம் தேவைப்படுகிறது. பிப்.2026 நிலவரப்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான நார்வேயின் வழக்கமான உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு 2,012 நார்வேஜிய குரோனர் (NOK) ஆகும். இது தகுதியுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொதுவான சலுகையே தவிர, பதிவில் கூறப்பட்டுள்ளபடி ஆண்டுக்கு ரூ.2.3 லட்சம் அல்ல.
நார்வே பெற்றோர்களுக்கான சலுகை வழங்குகிறது, ஆனால் அந்த விடுப்பு வரையறுக்கப்பட்ட முறையின் கீழ் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் பெற்றோர்கள் 100% ஊதியத்துடன் 49 வாரங்களையோ அல்லது 80% ஊதியத்துடன் 61 வாரங்கள் மற்றும் ஒரு நாளையோ தேர்ந்தெடுக்கலாம். இதில் ஒவ்வொரு பெற்றோருக்கும் தலா 15 வாரங்கள் ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள காலம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
பணியாளர்கள் தகுதி & வருமான வரம்புகளுக்கு உட்பட்டு மருத்துவ விடுப்புச் சலுகைகளைப் பெறுகின்றனர். ஆனால், வேலையின்மை உதவித்தொகை என்பது முந்தைய முழுச் சம்பளத்திற்கு இணையானது அல்ல; இது பொதுவாக முந்தைய வருமானத்தில் சுமார் 62.4% ஆகக் கணக்கிடப்பட்டு, தகுதி & பணி வரலாற்றைப் பொறுத்து 52 அல்லது 104 வாரங்கள் வரை வழங்கப்படுகிறது. நார்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய/ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி மாணவர்களுக்கு மட்டுமே பொது உயர்கல்வி பொதுவாகக் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இதற்கு வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் (சில விதிவிலக்குகள் தவிர) பொதுக் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும்.
நார்வேயின் சட்டப்பூர்வ வருடாந்திர விடுமுறை உரிமை என்பது குறைந்தபட்சம் 25 வேலை நாட்கள் ஆகும். சனிக்கிழமைகளும் வேலை நாட்களாகக் கணக்கிடப்படுவதால், இது நான்கு வாரங்கள் மற்றும் ஒரு நாளுக்குச் சமம். இது ஒட்டுமொத்தமாக ஒரு மாத ஊதியத்துடன் கூடிய கோடைக்கால விடுமுறை அல்ல. 2026-ம் ஆண்டில் நார்வேயின் அதிகபட்ச விளிம்புநிலை வருமான வரி விகிதம் (Maximum effective marginal tax rate) 47.4% ஆக உள்ளது. இது மிக உயர்ந்த வருமான வரம்பிற்கு மேல் ஈட்டப்படும் கூடுதல் வருமானத்திற்கு விதிக்கப்படும் உச்சபட்ச வரியே தவிர, ஒருவரின் ஒட்டுமொத்தச் சம்பளத்திற்கும் பிடித்தம் செய்யப்படும் வரி விகிதம் அல்ல.