மத்திய விழித்திரை நரம்பு அடைப்பு, விழித்திரையின் முக்கிய நரம்பில் இரத்த உறைவு உருவாகும் ஒரு தீவிர கண் நிலை. இது கண்ணுக்குள் இரத்த ஓட்டத்தை சீர்குலைத்து விழித்திரையை சேதப்படுத்துகிறது. மருத்துவர்களின் தகவல்படி இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நோயாளி மங்கலான பார்வையை அனுபவிக்கக்கூடும். படிப்படியாக முழுமையான பார்வையை இழக்க நேரிடும். இந்த பிரச்சனை இம்ரான் கானின் வலது கண்ணில் காணப்படுவதாகவும், அவர் ஏற்கனவே மங்கலான பார்வையை அனுபவித்து வருவதாகவும் அவரது கட்சியினர் கூறுகின்றனர்.
73 வயதான இம்ரான் கான் ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ளார். பெரும்பாலான நேரம் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக இம்ரான் கானை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர்களும் கட்சித் தலைவர்களும் கூறுகின்றனர். அவரது குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் வாரத்திற்கு இரண்டு முறை அவரைச் சந்திக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், இம்ரான் கான் கிட்டத்தட்ட 100 நாட்களாக தனது வழக்கறிஞர்களைச் சந்திக்கவில்லை.