அமெரிக்காவில் H-1B விசாக்களை நீட்டிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டணத்தால், நிறுவனங்கள் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை பணியில் இருந்து நீக்க வாய்ப்பில்லை. காரணம், இந்த கூடுதல் கட்டணத்தைச் செலுத்துவது, ஒரு திறமையான ஊழியரை இழந்துவிட்டு, அவருக்குப் பதிலாக புதிய ஒருவரைத் தேடும் செலவை விடக் குறைவுதான் என்கிறார் 'Build' நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CEO டேனியல் கோல்ட்மேன்.
செப்டம்பர் 9 முதல் புதிய விதிகள் அமல்
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS), ஏற்கனவே உள்ள H-1B மனுக்களுக்கான 4,000 டாலர் கட்டணத்தையும், L-1 மனுக்களுக்கான 4,500 டாலர் கட்டணத்தையும், சில விசா நீட்டிப்பு விண்ணப்பங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
இந்த புதிய விதிமுறை செப்டம்பர் 9-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதி யாருக்கெல்லாம் பொருந்தும் என்றால், அமெரிக்காவில் குறைந்தது 50 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் H-1B, L-1A அல்லது L-1B விசாக்களில் பணிபுரிந்தால், அந்த நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.