ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் (European Space Agency) கோப்பர்நிக்கஸ் சென்டினல்-1 (Copernicus Sentinel-1) செயற்கைக்கோள் சமீபத்தில் எடுத்த ஒரு புதிய புகைப்படத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். வறண்ட பாலைவனத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் உள்ள பிரமாண்டமான வண்ண வளையங்கள், வடக்கு சவுதி அரேபியாவில் விவசாயம் எப்படி நடக்கிறது என்பதைக் காட்டுகிறது.
அக்டோபர் 2024 (நீலம்), ஜனவரி 2025 (பச்சை) மற்றும் மே 2025 (சிவப்பு) ஆகிய மூன்று வெவ்வேறு மாதங்களில் ரேடார் தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்பட்ட இந்த படங்கள், காலப்போக்கில் நில பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்களை எடுத்துக்காட்டுகின்றன.
இந்த கவர்ச்சியான வண்ணமயமான வளையங்கள், உண்மையில் வாடி அஸ் சிருஹான் (Wadi As Sirhan) படுகையில் அமைந்துள்ள தபார்ஜல் (Tabarjal) நகருக்கு அருகில் உள்ள மத்திய-சுழல் நீர்ப்பாசன (central-pivot irrigation) வயல்வெளிகள் ஆகும். ஒவ்வொரு வட்ட வடிவ பண்ணையும் சுமார் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்டது. நீண்ட சுழலும் தெளிப்பான்கள் கிணற்றைச் சுற்றி வந்து, சீராக நீர்ப்பாசனம் செய்யும். இதனால் சரியான வட்ட வடிவில் சாகுபடி நிலங்களை உருவாக்குகின்றன.
சவுதி அரேபியாவின் வறண்ட காலநிலைக்கு இந்த அமைப்பு மிகவும் முக்கியமானது. இங்கு மழைப்பொழிவு குறைவாக உள்ளதுடன், பெரும்பாலான நிலங்கள் நீர்நிலைகள் இல்லாத வறண்ட பாலைவனமாகவே உள்ளன.