EB-5 விசா - கோல்டு கார்டு வித்தியாசம் என்ன?
இந்த கோல்டு கார்டு தற்போதுள்ள 35 ஆண்டுகால EB-5 விசா திட்டத்தை மாற்றும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க வணிகங்களில் குறைந்தது 1 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கு EB-5 விசா வழங்கப்படுகிறது. அதற்கு மாற்றாக இந்த கோல்டு விசா கொண்டுவரப்பட்டுள்ளது.
EB-5 விசாவுக்கும் கோல்டு கார்டு விசாவுக்கும் முக்கிய வித்தியாசங்கள் உள்ளன. தற்போதுள்ள EB-5 திட்டத்தின் கீழ், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்க வணிகங்களில் 800,000 டாலர் முதல் 1,050,000 டாலர் வரை செலவழித்து குறைந்தது 10 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதனுடன் கிரீன் கார்டுக்காக 5–7 ஆண்டுகள் காத்திருக்கும் காலமும் உண்டு. வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக 1990 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் மோசடிகள் நடைபெறுவதாகவும் பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள 'கோல்ட் கார்டு' விசா திட்டம் முதலீடு செய்வதற்கான நிதித் தேவையை 5 மடங்கு அதிகரித்து $5 மில்லியன் டாலராக உயர்த்துகிறது. அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்கான மிக விரைவான மற்றும் எளிமையான வழியாக உள்ளது. EB-5 விசாவின் கீழ் உள்ளதைப் போல வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனை இதில் இல்லை. இருந்தாலும், அதிக விலை கொடுக்கவேண்டியிருப்பதால் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு இது எட்டாக்கனியாகவே இருக்கும்.