ஐபோன் 17 ஏர் பற்றிய வதந்திகள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில், ப்ரீமியம் மாடல்களான ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இரண்டும் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களைப் பெற வாய்ப்புள்ளது. அதிகம் பேசப்படும் மாற்றங்களில் ஒன்று, ப்ரோ மாடல்களுக்கான ஃபிரேம்கள் டைட்டானியத்திலிருந்து அலுமினியத்திற்கு மாறுவது. இதுவும் எடையைக் குறைக்கும் உத்தியாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. போனின் ஆயுளை மேம்படுத்தவும் ஆப்பிள் அலுமினிய ஃபிரேமை மீண்டும் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.
ப்ரோ மாடல்கள் பாதி கண்ணாடி மீதி அலுமினியத்தால் ஆன பின்புறத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணாடி பகுதி மேக்சேஃப் சார்ஜிங்கிற்கான (MagSafe charging) ஆதரவைத் அளிக்கும். ஐபோன் 17 ப்ரோ மற்றும் புரோ மேக்ஸிலிருந்து எதிர்பார்க்கப்படும் மற்றொரு பெரிய மாற்றம், கேமராவில் தான். ஆப்பிள் தற்போதைய சதுர வடிவமைப்பை மாற்றி, கிடைமட்டமாக மாத்திரை வடிவ கேமரா பம்பிற்கு மாறுவதாகக் கூறப்படுகிறது.
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ கேமராக்களை தொழில்முறை கேமராக்களைப் போலவே திறன் கொண்டதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் ஐபோன் 17 பயனர்களுக்கு வீடியோ பதிவுக்கு சக்திவாய்ந்த கேமரா கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக, புரோ மேக்ஸ் மாடலில் 48 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய 12 மெகாபிக்சல் சென்சாரிலிருந்து குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாகும். இத்துடன், ஐபோன் 17 ப்ரோ மற்றும் புரோ மேக்ஸ் ஆகியவற்றில் புதிய பிசின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், அவை எளிதாக மாற்றக்கூடிய பேட்டரிகளைக் கொண்டிருக்கலாம்.