AC Maintenance Tips: வெயில் காலத்தில் ஏசி தீ பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Published : May 31, 2026, 03:11 PM IST

AC Maintenance Tips: கோடையில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஏசி வெடிப்பு விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. மின் கசிவு, ஓவர்லோடிங் போன்ற காரணங்களால் ஏற்படும் இந்த ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாகக் காண்போம்.

PREV
16
ஏசி பயன்பாடும், ஆபத்தும்!

கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி (Air Conditioner) பயன்பாடு பெருமளவு உயர்ந்துள்ளது. சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் (IEA) கணிப்புப்படி, இந்தியாவில் தற்போது வெறும் 8% வீடுகளில் மட்டுமே ஏசி இருந்தாலும், வரும் 2050ஆம் ஆண்டிற்குள் இதன் பயன்பாடு 9 மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

ஆனால், மற்றொரு புறம் டெல்லி, காசியாபாத் போன்ற நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏசிகள் திடீரென வெடித்து (AC Blast) பயங்கர தீ விபத்துகள் ஏற்படுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் அண்மையில் நடந்த ஏசி வெடிப்பு விபத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவமும் இதில் அடங்கும்.

ஏசிகள் ஏன் வெடிக்கின்றன? அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன? விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி? என்பவை குறித்து விரிவாக காண்போம்.

26
ஏசி வெடிப்பதற்கான காரணங்கள்

வீடுகளில் உள்ள ஏசி வெடிப்பதற்கும், வெளியே நிலவும் கடும் வெப்பத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். டெல்லி தீயணைப்புத் துறையின் தரவுகளின்படி, நகரில் நடக்கும் 60% தீ விபத்துகள் மின் கசிவு, ஓவர்லோடிங் மற்றும் தரமற்ற சாதனங்களால் ஏற்படுபவை ஆகும்.

  • கண்டென்சர் மீது கூடும் அழுத்தம்: ஐஐடி வாரணாசியின் மெக்கானிக்கல் துறை பேராசிரியர் சகார் சர்கார் விளக்கத்தின்படி, ஏசியின் குளிர்விக்கும் செயல்முறை சீராக நடக்க, கம்ப்ரசர் அல்லது கண்டென்சர் இருக்கும் வெளிப்பகுதி வெப்பநிலையானது, கண்டென்சரின் வெப்பநிலையை விட 10 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்க வேண்டும். இந்தியாவில் பொதுவாக கண்டென்சர் வெப்பநிலை 50°C வரை இருக்கும். கத்தரி வெயில் காலங்களில் வெளியேயும் 45°C முதல் 50°C வரை வெப்பம் உயரும்போது, கண்டென்சர் மீது அழுத்தம் அதிகரித்து அது வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
  • மின் கசிவு மற்றும் ஓவர்லோடிங் (Short Circuit): கோடையில் ஏசியை இடைவிடாமல் தொடர்ந்து இயக்கும்போது, ஒயர்களின் இன்சுலேஷன் உருகி ஷார்ட் சர்க்யூட் ஏற்படுகிறது. பொதுவாக மின்சுற்றில் கூடுதல் சுமை (Overload) ஏற்பட்டால், பாதுகாப்பிற்காகப் பொருத்தப்பட்டிருக்கும் MCB (Miniature Circuit Breaker) சுவிட்ச் தானாகவே மின்சாரத்தைத் துண்டித்துவிடும். ஆனால், தரம் குறைந்த அல்லது பழுதடைந்த MCB-களைப் பயன்படுத்தும்போது இந்த பாதுகாப்பு வளையம் வேலை செய்யாமல் போய் தீ விபத்து ஏற்படுகிறது.
  • கம்ப்ரசர் மற்றும் கேஸ் கசிவு: ஏசியின் வெளிப்புற யூனிட்டில் (Outdoor Unit) இருக்கும் கம்ப்ரசர்தான் குளிரூட்டும் வாயுவை (Refrigerant Gas) சுழற்சி செய்கிறது. இந்த ஒயரிங்கில் ஏற்படும் சிறு பொறியும் (Spark), அதே நேரத்தில் ஏசியில் இருக்கும் கேஸ் கசிவும் (Gas Leak) ஒன்றாக இணையும்போது, மூடிய அறைக்குள் அது பெரிய வெடிப்பாக மாறுகிறது.
  • அழுக்கடைந்த காயில்கள்: கண்டென்சர் காயில்களில் தூசியும் அழுக்கும் படிந்து அடைத்துக் கொண்டால், வெப்பத்தை வெளியேற்ற ஏசி கூடுதல் பலத்தைப் பிரயோகிக்க வேண்டியிருக்கும். இதனால் கம்ப்ரசர் மிக வேகமாக சூடாகி தீப்பற்றிக் கொள்கிறது.
36
இன்வெர்ட்டர் ஏசி பாதுகாப்பானதா?

வழக்கமான ஏசிகள் (Non-Inverter AC) அறையின் வெப்பநிலையைக் குறைக்க கம்ப்ரசரை முழு வேகத்தில் இயக்கி, பின்னர் முற்றிலும் அணைத்து, மீண்டும் ஆன் செய்யும். இந்த தொடர் ஆன்-ஆஃப் செயல்முறை கடும் வெயில் காலத்தில் இயந்திரத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை (Mechanical Stress) ஏற்படுத்தும்.

இதற்கு நேர்மாறாக, இன்வெர்ட்டர் ஏசிகள் கம்ப்ரசரின் வேகத்தை படிப்படியாகக் கட்டுப்படுத்துவதால், இயந்திரத்தின் மீதான அழுத்தம் குறைகிறது. இருப்பினும், இன்வெர்ட்டர் ஏசிகளும் முழுமையாக விபத்தில் இருந்து தப்ப முடியாது; அவற்றிலும் ஒயரிங் கோளாறு, மின் அழுத்த ஏற்ற இறக்கங்கள் (Voltage Fluctuations) அல்லது முறையான பராமரிப்பு இல்லை எனில் தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

46
ஆபத்தை உணர்த்தும் 4 எச்சரிக்கை அறிகுறிகள்

விபத்து ஏற்படுவதற்கு முன்பு ஏசி சில முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளை வெளிப்படுத்தும். இவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது:

1. ஏசி இயங்கும்போது வழக்கத்திற்கு மாறான விசித்திரமான சத்தங்கள் வருவது.

2. ஏசி அடிக்கடி தானாகவே ஆன் மற்றும் ஆஃப் (Frequent Cycling) ஆவது.

3. அறையில் குளிர்ச்சி சீராக இல்லாமல் திடீரெனக் குறைவது.

4. ஏசியில் இருந்து லேசான புகை அல்லது ஏதேனும் பொருள் கருகும் வாசனை வருவது.

56
செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்!

ஏசி விபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள்:

1.இடைவிடாத பயன்பாட்டைத் தவிர்க்கவும்: ஏசியைத் தொடர்ந்து பல மணி நேரம் இயக்கக் கூடாது. இயந்திரம் அதிக வெப்பமடைவதைத் தடுக்க, குறிப்பிட்ட இடைவெளிகளில் அதற்கு ஓய்வு தர வேண்டும்.

2.வெப்பநிலையை 22°C - 25°C இல் வைக்கவும்: ஏசியின் வெப்பநிலையை மிகக் குறைவாக (உதாரணமாக 16°C அல்லது 18°C) வைக்கும்போது கம்ப்ரசர் மீது கடுமையான அழுத்தம் ஏற்படும். எனவே, நிபுணர்களின் பரிந்துரைப்படி 22°C முதல் 25°C வரை வைப்பது பாதுகாப்பானது; மின்சாரமும் சேமிக்கப்படும்.

3.அவுட்டோர் யூனிட்டை நிழலில் அமைக்கவும்: ஏசியின் கம்ப்ரசர் இருக்கும் அவுட்டோர் யூனிட்டை நேரடி வெயில் படாதவாறு நிழலான மற்றும் போதுமான காற்றோட்டம் உள்ள பகுதியில் பொருத்த வேண்டும். அதன் அருகில் காய்ந்த இலைகள், குப்பைகள் அல்லது எந்தப் பொருட்களையும் குவிக்கக் கூடாது.

4.முறையான சர்வீஸ்: அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு ஏசியைத் தவறாமல் சர்வீஸ் செய்ய வேண்டும். ஏர் ஃபில்டர்களில் உள்ள தூசிகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் கம்ப்ரசரின் சுமையைக் குறைக்கலாம்.

5.துரு மற்றும் கேஸ் கசிவைச் சோதித்தல்: வெளிப்புற யூனிட்டில் உள்ள தாமிரக் குழாய்களில் (Copper Pipes) பச்சை நிறத்தில் துரு ஏறியிருந்தால், அது கேஸ் கசிவின் அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக அதைச் சரி செய்ய வேண்டும். மேலும், அலுமினியம் கண்டென்சர்களை விட, துருப்பிடிக்காத மற்றும் விரைவில் குளிர்ச்சியடையும் 'காப்பர் கண்டென்சர்' (Copper Condenser) கொண்ட ஏசிகளே சிறந்தவை.

66
முக்கிய குறிப்பு

உங்கள் பகுதியில் அடிக்கடி மின் அழுத்த ஏற்ற இறக்கங்கள் (Voltage Fluctuations) இருந்தால், ஏசிக்குத் தனியாக ஒரு ஸ்டெபிலைசரைப் (Stabilizer) பயன்படுத்துங்கள். நீண்ட நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஏசியின் முதன்மை பவர் சுவிட்சை (Main Switch) அணைத்து வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories