இறந்தவரின் ஐபோனை குடும்பத்தினர் பயன்படுத்த முடியுமா? பயனர்களுக்கு ஆப்பிள் கொடுக்கும் அட்வைஸ்!

First Published Oct 31, 2023, 3:38 PM IST

ஐபோன் பயன்படுத்தும் நபர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் அல்லது நண்பர்களில் ஒருவர் அவரது மொபைலை பயன்படுத்துவதற்கு அனுமதி பெற முடியும்.

Request to access deceased family member’s Apple account

ஆப்பிள் நிறுவனம் பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தரவுகளை மரணத்துக்குப் பின் நம்பகமான ஒருவரிடம் ஒப்படைக்க ஒரு வழியை உருவாக்கியுள்ளது. iOS 15.2, iPadOS 15.2 மற்றும் macOS 12.1 ஆகியவற்றுக்குப் பிந்தைய எந்த இயங்குதளத்தைக் கொண்ட ஆப்பிள் சாதனத்திலும் இந்த வசதி இருக்கும்

தகுதிவாய்ந்த ஐபோன் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களில் Legacy Contact என்ற அம்சம் இருக்கும். இதில் மரணத்துக்குப் பின் யாரிடம் தனது ஐபோன் ஒப்படைக்க வேண்டுமோ அவரிடம் உங்கள் சாதனத்தின் தனித்துவமான ஆக்ஸர் கீ ஒன்றைக் பகிர வேண்டும். உங்கள் இறப்புக்குப் பின்புதான் அவர் அதை பயன்படுத்த முடியும்.

Legacy Contact access key

இந்த வசதி ஒரு பயனர் தனது இறப்புக்குப் பிறகு அவரது ஆப்பிள் கணக்கில் சேமித்து வைத்திருக்கும் தரவுகளை அவர்கள் நம்பிக்கைக்குரிய ஒருவர் மட்டும் கையாளுவதை உறுதி செய்யும் மிகவும் பாதுகாப்பான வழி என்று ஆப்பிள் நிறுவனம் சொல்கிறது.

ஆனால், இந்த லெகசி காண்டாக்ட் (Legacy Contact) பயனர் இறந்த பிறகு மட்டுமே பயன்படுத்தப்படும். Legacy Contact எனக் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் இறந்தவரின் இறப்புச் சான்றிதழைக் காட்டி, ஆக்ஸர் கீயையும் சமர்ப்பித்த பின்புதான் மொபைலை Unlock செய்ய அனுமதி பெற முடியும். அவர் தரவுகளைக் கையாளுவதற்கு அனுமதி பெறுவதற்குப் பதிலாக, உங்கள் ஆப்பிள் கணக்கை நிரந்தரமாக மூடிவிடவும் கோரிக்கை வைக்கலாம். அதன்படி உங்கள் ஆப்பிள் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டுவிடும்.

iPhone, iPad அல்லது Mac என ஆப்பிள் சாதனங்கள் அனைத்தும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். Settings க்குச் சென்று , உங்கள் பெயரை கிளிக் செய்யவும். பின், Sign-In & Security என்பதைத் தேர்வு செய்து அதற்குள் Legacy Contact என்ற பகுதிக்குள் செல்லவும்.

இப்போது Add Legacy Contact என்பதைத் தேர்வு செய்யவும். இதற்குள் நுழைவதற்கான அங்கீகாரத்திற்காக, உங்கள் போனுக்கான பாஸ்கோடு எதுவோ அதை சரியாகப் பதிவு செய்ய வேண்டும்.

மேக் லேப்டாப்பில் இந்த வசதியை பயன்படுத்த Apple menu வில் உள்ள System Settings பகுதியில் உள்ள Apple ID பகுதிக்குச் செல்ல வேண்டும். பின், Sign-In & Security பகுதிக்குள் இருக்கும் Legacy Contact என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இப்போது Add Legacy Contact என்பதை கிளிக் செய்து பாஸ்கோடு மூலம் உள்ளே நுழைய வேண்டும்.

மேக் மற்றும் ஐபோனில் இவ்வாறு உள்ளே நுழைந்த பின்பு கிடைக்கும் தனித்துவமான ஆக்சஸ் கீயை நம்பகமான நபரிடம் பகிரலாம். இறப்புச் சான்றிதழை வழங்காத வரை எந்தத் தரவையும் யாரும் அணுக முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே பயனர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களின் பிரைவசி பறிபோகுமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. மீண்டும் Settings பகுதிக்குச் சென்று இந்த Legacy Contact ஆக்சஸ் கீயை அகற்றலாம் என்பதையும் ஆப்பிள் பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

click me!