யார் இந்த தந்தை பெரியார்
பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி 1879-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். 1902-ம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். அனைத்து சாதியினருடனும் சேர்ந்து சமமாக உணவு சாப்பிட்டார்.
இனப்பாகுபாடு, வேற்றுமை எதுவும் இல்லாமல் அனைவருடனும் சரிசமமாக பழகுவார். இதனால் அவருக்கும், அவர் தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, துறவு பூண்டு காசிக்கு சென்றார் தந்தை பெரியார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வுகளால் இறைமறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார்.
பெண் விடுதலைக்காக போராட்டம்
காந்தியின் கொள்கைகளில் பெரியாருக்கு ஈடுபாடுகள் இருந்தது. இதனால் 1919- ஆம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர். பல போராட்டங்கள் நடைபெற்ற இடங்களில் கலந்து கொண்டனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். அதன் பின்னால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சென்னை மாகாணத்தில் 1922 -ஆம் ஆண்டு பொறுப்பெற்றனர். பெரியார் அரசு பணியிலும், கல்வியிலும் இடஒதுக்கீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை காங்கிரஸ் ஏற்காததால் காங்கிரஸ் கட்சியை விட்டு 1925-ம் ஆண்டு விலகினார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் தொடர்ந்து போராடினார்.
வைக்கம் வீரர் தந்தை பெரியார்
கேரளாவில் இருக்கும் வைக்கம் என்னும் ஊரில் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்தி பெரியார் சிறை சென்றார், இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என அழைக்கப்பட்டார். மக்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளை போக்குவதற்காக 1925-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் மற்றும் குடியரசு நாளிதழை தொடங்கினார். இது மட்டுமல்லாமல் மாநாடு, கூட்டங்கள் போன்றவற்றை நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பெரியாரை சந்தித்த அண்ணா
காங்கயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியாரும் அண்ணாவும் ஒரே மேடையில் பங்கேற்றுப் பேசினார்கள். அப்போதே அண்ணாவின் கம்பீரமான அடுக்குமொழிப் பேச்சைக் கேட்டு பிரம்மித்துப் போனார் பெரியார். ஆனால் அப்போது இருவரும் சந்தித்து பேசிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனையடுத்து திருப்பூர் செங்குந்தர் மகாஜன சங்க மாநாட்டில் இருவரும் மீண்டும் பங்கேற்றனர். அப்போதும் அண்ணாவின் பேச்சில் மயங்கிய பெரியார், கூட்டம் முடிந்ததும் அண்ணாவை தனியே அழைத்துப் பேசினார். இதனை தொடர்ந்து தான் அண்ணா அரசியலில் ஈடுபட தொடங்கினார்.
Periyar
மணியம்மை- பெரியார் திருமணம்
ஜூலை 9ஆம் தேதி 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மை மணம் புரிந்து கொண்டதற்கு காரணம் காட்டி அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற திமுக என்ற புதிய கட்சி தொடங்கினார் அண்ணா. தனது ஆட்சி காலத்தில் பெரியாரின் கொள்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி காட்டினார் அறிஞர் அண்ணா.
50ஆம் ஆண்டு நினைவு நாள்
தந்தை பெரியார் தன் வாழ்நாளில் மொத்தம் 8.20 லட்சம் மைல்கள் தூரம் பயணித்து, 10, 700 பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று, 21, 384 மணி நேரம் பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளார். சமூகத்திற்கு பல நன்மைகளை செய்த பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படும் பெரியார் 94-வது வயதில் 1973-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் அவரது கருத்துகள் மக்களிடம் உயிர்ப்போடு உள்ளது.