மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்துப் பேசிய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
1 ஓட்டு அதிகமா வாங்கி காட்டுங்க ராஜினாமா பண்றேன்...
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளில் அக்.6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தவெக நிர்வாகியும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா நேற்று (27-09-2026) தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
24
தி.மு.க.வை அழிக்க உதயநிதி ஸ்டாலின் போதும் - ஆதவ்
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க.வை யாரும் அழிக்க முடியாது என கலைஞர், கனிமொழி ஆகியோர் சொல்வார்கள். ஆனால் இப்போது அந்தக் கட்சியை யாரும் அழிக்க வேண்டாம்; மு.க.ஸ்டாலின் பிள்ளை போதும் அந்தக் கட்சியை அழிப்பதற்கு. தி.மு.க.வை அழிக்க வந்தவரே உதயநிதி ஸ்டாலின்தான்.
1967-ல் அறிஞர் அண்ணா தமிழ்நாட்டில் மக்களாட்சியைக் கொண்டு வந்தார். அதன் பிறகு கலைஞர் குடும்ப ஆட்சியைக் கொண்டு வந்து, மன்னராட்சியை உருவாக்கினார். 50 வருடங்கள் கழித்து மு.க.ஸ்டாலின் நல்லது செய்வார் என்று மக்கள் அவருக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்தார்கள். ஆனால், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் மன்னராக வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது. அவரை மன்னராக்குவதற்காகத்தான் அவர்களது ஆட்சியில் பல கொடுமைகளைச் செய்தார்கள்.
34
அவர் அந்தப்புர இளவரசர் - ஆதவ் அர்ஜூனா ஆவேசப் பேச்சு
தொடர்ந்து பேசிய அவர், ஒரு மன்னர் என்றால் களத்தில் நின்று போர் புரிய வேண்டும். ஆனால் இளவரசர் உதயநிதி அந்தப்புரத்து இளவரசராகத்தான் இருந்தார். அந்தப்புரத்தை விட்டு அவர் வெளியே வந்ததே கிடையாது. அங்கிருந்து வந்தவருக்கு அங்கு கற்றுக்கொண்ட ஆபாசம்தான் வாயில் வரும். பெண்களைப் பார்த்தால் அசிங்கமாகப் பார்க்கும் புத்தி அவருக்கு இருக்கிறது. இது ஒரு மனநோய்; இந்தப் புத்தி அவரது பிறப்பிலேயே இருக்கிறது எனக் கடுமையாகச் சாடினார்.
இங்கிருந்து நான் உதயநிதிக்கு நேரடி சவால் விடுகிறேன். மதுராந்தகத்தில் திமுக ஜெயித்துவிட்டால், என்னுடைய கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இன்னும் தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது; உங்கள் அப்பாவை ஏன், உங்கள் தாத்தாவை வேண்டுமானாலும் கூட்டி வாருங்கள். ஆனால், இளவரசர் உதயநிதி தோற்றுவிட்டால், உன்னுடைய கட்சிப் பதவி எல்லாவற்றையும் ராஜினாமா செய்யத் தயாரா?
நாங்கள் எல்லோரும் எளிய வீட்டுப் பிள்ளைகள். நீங்கள் 70 வருடக் கட்சி ஆயிற்றே; பெரிய ஆலமரம் ஆயிற்றே; உங்களிடம்தானே அரசியல் இருக்கிறது... மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை விட ஒரு ஓட்டு உதயநிதி அவர்களே நீங்கள் கூடுதலாக வாங்கி காண்பித்து விடுங்கள் பார்க்கலாம்! அதேபோல, நாங்கள் ஒரு ரூபாய் கூட ஓட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டோம். காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டும் என்ற கலாச்சாரம் எங்களிடம் கிடையாது. இந்த சவாலுக்கு உதயநிதி தயாரா என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று ஆதவ் அர்ஜூனா ஆவேசமாக பேசினார்.