உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், காவல்துறை மற்றும் தொல்லியல் துறையின் நிபந்தனைகளை எதிர்த்து ராம ரவிக்குமார் தரப்பிலும், திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து தீபத்தூணில் அணையா விளக்கு ஏற்றவும், பாதுகாப்பிற்காக மத்திய ரிசர்வ் காவல் படையை (CRPF) பணியமர்த்தவும் கோரி இந்து தர்ம பரிஷத் அமைப்பின் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிபதிகள் அரவிந்த் குமார், வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய் ஆகியோர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்;
24-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், குன்றின் உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் வரலாற்றில் எப்போதும் இருந்ததில்லை. 150 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆகம விதிகள் மற்றும் ஸ்தானிகர்களின் ஆலோசனையின்படி, உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள தீப மண்டபத்தில் மட்டுமே கோவில் நிர்வாகத்தால் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
1923-ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் லண்டன் பிரிவி கவுன்சில் உத்தரவின்படி, நெல்லித்தோப்பு பகுதி, பள்ளிவாசல் செல்லும் படிகள், மலை உச்சியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் கொடிக்கம்பம் அமைந்துள்ள பாறை ஆகிய இடங்களைத் தவிர்த்து, ஒட்டுமொத்த மலையும் கோவிலுக்குச் சொந்தமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் கோவில் நிர்வாகத்தைத் தொல்லியல் துறை கையகப்படுத்த முடியாது என்றும், தனியார் அமைப்புகளுக்கு இதில் எவ்வித உரிமையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள வழக்கத்தை மாற்றினால் சலசலப்பு ஏற்படக்கூடும் என்பதால், உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.