TN Rain Alert: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அக்வான் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முழு விவரம் இதோ.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவம்பர் 16) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் நகர்ந்து தெற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறக்கூடும். நாளை (நவம்பர் 17) தீவிரப் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து ஆந்திரக் கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
25
இன்று தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்?
நவம்பர் 16ஆம் தேதியான இன்று வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
35
நாளை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
நவம்பர் 17ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மற்ற வட கடலோர தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதனால் வட கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
நவம்பர் 18ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் வட கடலோர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
55
மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளில் நவம்பர் 16ஆம் தேதி மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். நவம்பர் 17ஆம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. ஆகவும், இடையிடையே 70 கி.மீ. ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலில் இருப்பவர்கள் பாதுகாப்பாகக் கரை திரும்ப வேண்டும். புயலின் நகர்வு மற்றும் மழை எச்சரிக்கைகள் மாறக்கூடும் என்பதால் வானிலை மையத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளைப் பின்பற்றுவது அவசியம்.