Published : Feb 12, 2025, 10:57 AM ISTUpdated : Feb 12, 2025, 11:15 AM IST
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் தலையில் இடியை இறக்கிய சென்னை உயர்நீதிமன்றம்! குஷியில் ஓபிஎஸ்!
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இடையே எற்பட்ட மோதல் காரணமாக தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. ஆனால், அனைத்து வழக்குகளின் தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்தது.
25
அதிமுக உட்கட்சி விவகாரம்
இந்நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்கக்கோரி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், ராம்குமார் ஆதித்தன் மற்றும் புகழேந்தி ஆகியோர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.
35
எடப்பாடி பழனிசாமி
இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய தலைமை தேர்வு செய்தது உள்ளிட்ட உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை. உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளது. அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
45
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் தரப்பில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும். தற்போது இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
55
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இதனையடுத்து ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஓபிஎஸ் கட்சியின் பெயர், கொடி பயன்படுத்த தடை விதித்திருந்தாலும், தற்போது கட்சி உறுப்பினர்கள் மன நிலைமை மாறி பெரும்பாலானோர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளனர். ஆகையால் இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில், அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீட்டு சட்டப்படி விசாரணை நடத்தலாம். தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என்ற எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.