DMK Ex Minister Ragupathi : தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 60 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் சுமார் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டால், மாநில அரசியலில் ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த ரகுபதி, தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, அரசு அதிகாரிகளிடம் சில எம்.எல்.ஏ.க்கள் நடந்துகொள்ளும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசுவது மற்றும் அவர்களிடம் வரம்பு மீறி நடந்துகொள்வது போன்ற சம்பவங்கள் தமிழக அரசியலில் இதற்கு முன்பு அரிதாகவே காணப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
24
தவெகவில் 60 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
தொடர்ந்து பேசிய அவர், தவெகவில் மொத்தம் 109 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், அவர்களில் ஏறக்குறைய 60 பேர் கட்சித் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருவதாகக் குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கை குறித்த தகவல்களுக்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றாலும், அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் உறுப்பினர்களைச் சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
ஒருவேளை இந்த 60 எம்.எல்.ஏ.க்களும் கட்சியிலிருந்து விலகினால், அவர்கள் தனி அணியாகச் செயல்படக்கூடிய சூழல் உருவாகலாம் என்றும் ரகுபதி கூறினார். இதனால் தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேபோல், அதிமுகவிலும் சுமார் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாகத் தெரிவித்தார்.
34
குதிரை பேரமா?
இதற்கிடையே, தவெக எம்.எல்.ஏ.க்களை திமுக குதிரை பேரம் மூலம் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார். திமுகவுக்கு அத்தகைய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய தேவை இல்லை என்றும், எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு திமுகவிடம் நிதி வசதி இல்லை என்றும் விமர்சித்தார். தமிழக மக்களிடம் உருவாகியுள்ள அரசியல் மாற்றத்தைச் சரியாகப் பயன்படுத்தி நல்லாட்சியை வழங்க முடியும் என்ற நம்பிக்கை திமுகவுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தவெகவில் உட்கட்சிப் பிரச்சினைகள் அதிகரித்து, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான பெரும்பான்மை பலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் ஆளுநரின் தலையீடு அவசியமாகலாம் என்றும் ரகுபதி கூறினார். அத்தகைய சூழலில் சட்டமன்றம் முடக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரிவித்தார்.
அதன்பின்னர் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும், எந்தக் கட்சியாலும் தேவையான ஆதரவைப் பெற முடியாத நிலை ஏற்பட்டால் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அவர் விளக்கினார். அப்படி தேர்தல் நடைபெற்றால் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தங்களுக்கும் தமிழக மக்களுக்கும் இருப்பதாகக் கூறினார்.
மறுபுறம், தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் மக்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் ரகுபதி குற்றம்சாட்டினார். குறிப்பாக, சுமார் 20 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தை அவர் சுட்டிக்காட்டினார். பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடையே அரசுக்கு எதிரான அதிருப்தி அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.