தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு நாள் தினம் செப்டம்பர் 11ம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது.
அதேபோல சுதந்திர போராட்டத் தலைவரும், ஆன்மீகவாதியுமான முத்துராமலிங்க தேவர் அக்டோபர் 30ல் பிறந்து அக்டோபர் 30ல் மறைந்தவர். பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்டோபர் 30ல் ஆண்டுதோறும் குருபூஜை நடந்தப்படுவது வழக்கம். இந்த இரு நாட்களிலும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் இவர்களது நினைவிடங்களுக்கு வருகை தருவர். அன்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவர். இந்த சமயங்களில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்ட அறிக்கையில்;- ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வரும் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30ம் தேதி கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்க செப்டம்பர் 9ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இதனால் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், 5 பேர் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் வரவும், ஜோதி ஓட்டங்கள் எடுத்து வரவும், பிளக்ஸ் பேனர்கள் வைப்பது, வெடிகள் வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து வசதி போலீஸ் பாதுகாப்புடன் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.