கருப்பு ஆடைகள் பொதுவாக அசுப சகுனமாகவே கருதப்படுகிறது. அதுவும் நல்ல காரியத்திற்காக புறப்படும்போது, கோயிலுக்கு செல்லும்போது அதனை அணிவது தவறு என பெரியவர்கள் மணிக்கணக்கில் அறிவுரை வழங்குவர். ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் போது கருப்பு உடை அணிகின்றனர். கருப்பு வேட்டி, பேன்ட், சட்டை அல்லது டி-சர்ட் தான் அங்கு செல்ல ட்ரெஸ் கோட் ஆக உள்ளது.
கார்த்திகை மாதத்தின் ஆரம்பத்தில் ஐயப்பனுக்கு விரதம் தொடங்குகிறது. இது மிகவும் கடுமையான விதிகளுடன் நடத்தப்படுகிறது. இதனை கஷ்டங்களை போக்கவும், நினைத்த காரியங்கள் நடைபெறவும் செய்கிறார்கள். சுமார் 48 நாட்கள் கருப்பு ஆடைகளை அணிந்து ஐயப்ப பக்தர்கள் கடுமையான விரதத்தை கடைபிடிக்கின்றனர். சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது இதன் அடிப்படை பழக்கம். மது, மாது, ஆசைகளை துறந்து நாள்தோறும் ஐயப்பனை வணங்கி வருவார்கள். இந்த நாட்களில் அவர்கள் கருப்பு ஆடைகளை உடுத்துவதற்கும் சனி பகவானுக்கும் தொடர்பு உள்ளதாம்.
ஐயப்பன் புராணக் கடவுள் கிடையாது. ஆகவே புராணங்கள், உபநிடதங்களில் அவர் குறித்து ஏதும் காணப்படவில்லை. ஐயப்பன் சனி பகவானுடன் உரையாடுவார் என நம்பப்படுகிறது. அவர் சனிபகவானிடம் தனது பக்தர்களின் துயரம் நீக்க பரிந்து பேசுவாராம். அதனால் தான் சனி தோஷம் நீங்க ஐயப்பனுக்கு மாலை அணிகிறார்களாம். ஐயப்பன் சனிபகவானுக்கு தனது பக்தர்களை தொந்தரவு செய்யக்கூடாது என கட்டளையிட்டுள்ளார்.
இதையும் படிங்க; கோர்ட் கேஸ்னு இழுபறியாக கிடக்கும் சொத்தை மீட்க இப்படி விளக்கேற்றுங்கள்!
பிரம்மச்சரியம், ஒரு வேளை உணவு, வெறும் தரையில் தூக்கம், செருப்பின்றி நடை என ஐயப்பனுக்கு விரதம் அனுஷ்டிப்பவருக்கு சனி தோஷம் வராது. ஒரு நபரை ஏழரை ஆண்டுகள் சனி தோஷம் துன்பப்படுத்துகிறது. ஐயப்பனுக்கு விரதமிருக்கும் பக்தர்களை சனியால் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு பதிலாக தன்னுடைய பக்தர்கள் சனியுடன் தொடர்புடைய கருப்பு அல்லது நீல நிற உடைகளை அணிவார்கள் என ஐயப்பன், சனிக்கு உறுதியளித்ததாக நம்பப்படுகிறது. இதுவே ஐயப்ப பக்தர்கள் கருப்பு ஆடை அணிவதற்கு காரணமாகும்.