
Budha Pradosha Viratha Palan Tamil : ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷத்திற்கு சிறப்பு பலன் உண்டு. அதுவும் சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கள் பிரதோஷம், குரு வாரம், சுக்ரவாரம், சனி வாரம் என்று வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு அவ்வளவு சிறப்பு பலன்கள் உண்டு. அதைவிட பெருமாளுக்கு உகந்த நாளான புதன் கிழமை வரும் பிரதோஷம் இன்னும் கூடுதலான சிறப்பு பலன்களை தரும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி இன்று பிரதோஷம், நாளை குருவிற்கு உகந்த வியாழக்கிழமை, நாளை மறுநாள் ஐப்பசி அன்னாபிஷேகம், சனிக்கிழ்மை கிருத்திகை இப்படி இன்று முதல் அடுத்த 4 நாட்கள் சிறப்பான நாட்கள். இந்த நாட்களை மறந்து விடாதீர்கள்.
பொதுவாக புதன் பகவானை புத்திக்காரன் என்பார்கள். புதனுக்குரிய கடவுள் பெருமாள். அப்படிப்பட்ட இந்த நாளில் பிரதோஷம் வந்துள்ளது. இந்த நாளில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று நந்தி பகவானிடம் ஆசி பெற்று அவரது அனுமதியோடு சிவபெருமானை தரிசனம் செய்தால் அறிவில் சிறந்து விளங்கலாம். செல்வ, செழிப்பு உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் தான். கஷ்டப்படுவோர் மனம் உருகி அவர்களது கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கோயில் பிரகாரத்தில் விழும் வகையில் வேண்டுதல் வைக்கும் பக்தர்களுக்கு எம்பெருமான் சிவன் வேண்டுதலை நிறைவேற்றி கொடுப்பார்.
அவரது கண் முன்னே அவரது கோயிலில் இப்படி வேண்டுதல் வைக்கும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டும் வரத்தை கொடுத்தருள்வார். பொதுவாக பிரதோஷம் என்றாலே குளித்து முடித்து காலையில் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகத்திற்குரிய பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்துவிட வேண்டும். பெரிய பெரிய சிவன் கோயில்களில் பிரதோஷ அபிஷேகத்தை காண முடியாது.
ஆதலால், பால், தயிர், பன்னீர், இளநீர், குங்குமம், தேன், மஞ்சள் என்று பிரதோஷ அபிஷேகத்திற்கு என்னென்ன கொடுக்க வேண்டுமோ உங்களால் முடிந்தவற்றை வாங்கி கொடுத்துவிட வேண்டும். பின்னர் மாலையில் பிரதோஷ வேளை என்று சொல்லக் கூடிய 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று நந்தி பகவானின் அருளோடு, ஆசியோடும், அவரிடம் அனுமதி பெற்று தான் சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
பெரும்பாலான பக்தர்கள் இதனை செய்வதில்லை. சிவன் கோயில் மட்டுமின்றி எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் வாகனத்தை வழிபட்டு அவர்களிடம் ஆசி பெற்று தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு முருகன் கோயிலுக்கு சென்றால் வாகனமான மயிலையும் அவரது தளபதியான வீரபாகுவிடம் அனுமதி பெற வேண்டும். பெருமாள் கோயில் என்றால் கருட பகவானை வணங்க வேண்டும், விநாயகர் என்றால் மூஷிகரை வழிபட வேண்டும்.
இப்படி அந்தந்த கடவுள்களுக்குரிய வாகனங்களை வழிபட்ட பிறகு தான் மூலவரை வழிபட வேண்டும். அந்த வகையில் சிவன் கோயிலில் நந்தி பகவானை வழிபட்ட பிறகு மூலவரை வழிபட வேண்டும். நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சாற்றி வழிபாடு செய்யலாம். மாலை நீங்களே கட்டுவதாக இருந்தால் ஒவ்வொரு பூ அல்லது இலை எடுத்து கட்டும் போது எப்போதும் இறை சிந்தனையில் இருக்க வேண்டும். இறைவனிடம் கோரிக்கை வைக்க வேண்டும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெற வேண்டும், படிப்பில் தடை வர கூடாது செல்வ, செழிப்பு உண்டாக வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அந்த மாலையை நந்தி பகவானுக்கு சாற்றி வழிபட வேண்டும். மேலும், நந்தி பகவானே என்னுடைய கோரிக்கையை வேண்டுதலை சிவபெருமானிடம் எடுத்து செல், வேண்டுதலை நிறைவேற்றி கொடுத்தால் உனக்கு மணி வாங்கி கட்டுகிறேன் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்படி வேண்டுதல் வைக்கவே கூடிய விரைவில் உங்களது வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேறிடும்.
நந்தி பகவானைத் தொடர்ந்து சிவபெருமானையும், நவக்கிரகங்களில் இருக்க கூடிய புதன் பகவானையும் வழிபாடு செய்ய வேண்டும். சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபாடு செய்யுங்கள். ஜாதகத்தில் புதன் சாதகமற்ற திசையில் இருந்து கெடு பலன்களை கொடுத்து வந்தால் இந்த நாளில் சிவனை வழிபாடு செய்வதோடு, புதனையும் வழிபடவே எல்லா நன்மைகளும் நடக்கும்.
சிவனை வழிபாடு செய்யும் போது ஓம் நமசிவாய என்ற சிவனுக்குரிய மந்திரத்தை நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டிலிருந்து கோயிலுக்கு செல்லும் போது காலணி அணியாமல் சென்றால் அது இன்னும் கூடுதல் பலனை உங்களுக்கு அளிக்கும். மேலும், கோயிலுக்குள் செல்லும் போது காலை கழுவிவிட்ட பிறகு தான் செல்ல வேண்டும். மறந்துவிடாதீர்கள்.