Tirupati: திருப்பதிக்கு போறீங்களா? அந்த 3 நாட்களுக்கு தடை! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய செய்தி இதோ!

First Published | Sep 21, 2024, 2:21 PM IST

Tirumala Tirupati Devasthanam: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா அக்டோபர் 4ம் தேதி தொடங்கி அக்டோபர் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.

உலகளவில் பணக்கார கோவில்களில் திருமலை திருப்பதி கோவிலும் ஒன்று. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு கூட்டம் அலைமோதும். இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்தே திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி தொடங்கி அக்டோபர் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் திருப்பதி ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பார். இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை அக்டோபர் 8ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் மூன்று நாட்களுக்கு மலைப்பாதைகளிலும் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos


இதுதொடர்பாக கருட சேவைக்கான அனைத்து துறைகளின் ஏற்பாடு குறித்து திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், அக்டோபர் 8ம் தேதி கருட சேவையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அன்றைய தினம் அக்டோபர் 7-ம் தேதி இரவு 9 மணி முதல் 9-ம் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்காக பிரத்யேக வாசல்களும் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் திருப்பதி ஏழுமலையானை புரட்டாசி மாதத்தில் இலவச தரிசனம் செய்ய விரும்புவோர் திருப்பதி ரயில் நிலையம் எதிரில் உள்ள அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாஸ் ஆகிய இடங்களில் தினமும் அதிகாலை 2 மணி முதல் டோக்கன் பெறலாம். டோக்கன் பெற்ற அன்றைய தினத்தில் அல்லது அடுத்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய முடியும். சந்திரகிரியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு வழியாக படியேறி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் காலை 6 மணிக்கு 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் 90 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ள வசதியாக தரிசன டிக்கெட்டுகளை ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

click me!