சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 10 கோவில்கள் இதுதான்..!

First Published | Jul 25, 2023, 3:27 PM IST

சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோயில்களில் கபாலீஸ்வரர், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்கள் இடம் பெற்றுள்ளன. 

* பார்த்தசாரதி கோயில் (திருவல்லிக்கேணி)

எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது. பெருமாளின் பத்து அவதாரங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 108 திவ்ய தேசங்களில் இது 61வது திவ்ய சேதம். 9 அடி உயர மூலவர் சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக சிறப்பு. பொதுவாக எல்லா பெருமாள் விக்கிரகங்களும் கையில் ஏதேனும் ஒரு ஆயுதம் ஏந்தியிருப்பதை காணலாம். ஆனால் இத்தல கடவுளான பார்த்தசாரதி பெருமாள் தனது கையில் ஆயுதம் ஏதும் இன்றி இருப்பது கூடுதல் சிறப்பு.

கபாலீஸ்வரர் கோயில் (மயிலாப்பூர்)

7ம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது தான் இந்த கபாலீஸ்வரர் கோயில். சென்னை மயிலாப்பூரில் இந்த கோயில் அமைந்துள்ளது.  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலங்களில் இது 257 வதாகும். 

Tap to resize

வடபழனி முருகன் கோவில் (வடபழனி)

இந்த கோயிலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அனைவருக்கும் தெரிந்திருக்கும். சென்னை வடபழனியில் இந்த கோயில் அமைந்துள்ளது. பழனியில் உள்ள முருகனைப் போலவே இங்குள்ள முருகனும் உள்ளதால் இது வடபழனி என்று அழைக்கப்படுகிறது. 

அஷ்டலட்சுமி கோவில் (பெசன்ட் நகர்)

எட்டு லட்சுமிகளை தான் அஷ்டலட்சுமி என்கிறோம். சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள இந்த அஷ்டலட்சுமி கோயில் 1974ம் ஆண்டு கட்டப்பட்டது. கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது. 

*  மருதீஸ்வரர் கோவில் ( திருவான்மியூர்)

சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்த சிவதலம் மருதீஸ்வரர் கோயில். 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலுக்கு வால்மீகி விஜயம் புரிந்தார் என்று கூறப்படுகிறது. மேலும் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக  அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலங்களில் இது 258 வதாகும். 

* அருள்மிகு கந்தசாமி கோவில் (கந்தகோட்டம்)

சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம். பிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில் இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது. தோல் நோய் மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் திருவருட்பாவில் பாடிய தலம் இது.

தேவபுரீஸ்வரர் கோவில் (திருவேற்காடு)

திருவேற்காடு என்றவுடன் தேவி கருமாரி அம்மன் கோயில்தான் நினைவுக்குவரும். அதே திருவேற்காட்டில் பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது சுமார் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டதால் வேற்காடு எனப்பெயர் பெற்றது. இத்தலத்து மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜப்ரிஷ்டம் என்று அழைக்கப்படுகின்றது. இத்தளத்தில் சிவபெருமான் மனித உருவில் திருமணக் காட்சி தந்து அருள்பாலித்து வருகிறார்.

காமாட்சி அம்மன் கோவில்( மாங்காடு)

காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி மதுரை மீனாட்சி என்று அகிலமெல்லாம் போற்றிப் புகழ்வது போன்றே மாங்காடு காமாட்சியம்மன் கோயிலும் பிரசித்தி பெற்றதாகும். அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். 

* பாலசுப்பிரமணியர் கோவில் (சிறுவாபுரி)

கேட்டவை எல்லாம் கொடுக்கும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில். திருமணயோகம் கைகூடவும், சொந்தமாக வீடு வாகனம் வாங்கவும் தொழிலில் முன்னேறவும் சிறுவாபுரியில் இருக்கும் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து வழிபட்டால் அனைத்தும் கிடைக்குமாம். சிறுவர்களாக இருந்த தன் மகன்களுடன் ராமர் போரிட்ட காரணத்தால் சிறுவர் என்கிற சொல்லிலிருந்து இத்தலத்திற்கு சிறுவாபுரி என்கிற பெயர் வந்துள்ளது. இக்கோயிலின் ராஜ கோபுரங்கள் ஐந்து நிலைகளைக் கொண்டது. உள்ளே இருக்கும் கொடி மரத்தின் முன்னே மரகதப் பச்சை மயில் உள்ளது. இதுபோல் சிறந்த வடிவமைப்பு உள்ள மரகத மயில் வேறு எங்கும் இல்லை.

தேவநாதப்பெருமாள் கோவில்(செட்டிப்புண்ணியம்)

தேவநாத பெருமாள் கோயிலானது காலப்போக்கில் ஹயக்ரீவர் கோயில் என பெயர் பெற்று விட்டது. அருள்மிகு ஸ்ரீ ஹயக்ரீவர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு வட்டத்தில் இருக்கும் செட்டிபுண்ணியம் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது. இங்கு குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தி நான்கு கைகளுடன் சங்கு, சக்கரதாரியாக யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். ஹயக்ரீவ பெருமாளை பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ  மாணவிகள் அதிகளவில் வந்து வழிபடுகின்றனர்.

Latest Videos

click me!