சத்யநாராயண பூஜை என்பது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ சத்ய நாராயணரை வழிபடும் ஒரு புனிதமான பூஜையாகும். எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்னரும் சத்யநாராயண பூஜை செய்வது உகந்தது. இந்த பூஜையை செய்து விட்டு செயல்களை ஆரம்பித்தால் தடைகள் ஏதும் ஏற்படாது, அந்த காரியம் வெற்றி அடையும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
இந்த விரதத்தை பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். இந்த பூஜை செய்வதற்கு சில விதிமுறைகள் மற்றும் வரையறைகள் உண்டு அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விரத முறைகள்:
சத்யநாராயண விரதத்தை பௌர்ணமி நாளில் மேற்கொள்வது நல்லது. விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு நாள் முழுவதும் உண்ணாமல் உபவாசம் இருக்க வேண்டும். முழுமையாக உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஒரு வேளை உணவருந்திக் கொள்ளலாம் அல்லது பழங்கள், பால், துளசி தீர்த்தம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். விரதம் இருக்கும் நாள் முழுவதும் மனதையும், உடலையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
கோபம் கொள்ளுதல், அமங்கல வார்த்தைகள் பேசுதல், பிறரை நிந்தித்தல், பொய் பேசுதல் போன்றவை கூடாது. மாலை அல்லது இரவு நேரத்தில் முழு பக்தியுடன் பூஜை செய்து சத்யநாராயணர் கதையை படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும். சந்திரன் உதயமான பின்னர் பூஜையை முடித்து பிரசாதத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
பூஜை செய்முறை:
சத்யநாராயண பூஜை பொதுவாக கோவில்கள் அல்லது வீடுகளில் செய்யப்படுகின்றன. இது குருக்களின் உதவியுடன் செய்யப்படும் பூஜையாகும் அல்லது நாமே எளிமையான முறையில் செய்யலாம்.
பூஜைக்கு தேவையான பொருட்கள்:
- ஸ்ரீ சத்யநாராயணர் படம் அல்லது சிலை மரப்பலகை
- மஞ்சள், குங்குமம், சந்தனம்
- பூக்கள், துளசி மாலை
- மாவிலை, தேங்காய், வெற்றிலைப் பாக்கு பழங்கள்
- தீபம், ஊதுபத்தி
- அட்சதை, புதிய வஸ்திரம்
- பிரசாதமாக: ரவை சர்க்கரை நெய் பால் வாழைப்பழம் உலர் திராட்சை முந்திரி கலந்து செய்யப்படும் ஒரு வகை கேசரி அல்லது அல்வா
- கலசம் வைப்பதற்கு: அரிசி அல்லது நீர் நிரம்பிய செம்பு அல்லது வெள்ளி கலசம்.
பூஜை படிகள்:
பூஜை செய்யும் இடத்தை தூய்மை செய்துவிட்டு மாக்கோலம் இட்டு அலங்கரிக்க வேண்டும். ஒரு பலகையின் மீது புதிய சிகப்பு அல்லது மஞ்சள் துணியை விரித்து அதில் ஸ்ரீ சத்யநாராயணர் படம் அல்லது சிலையை வைக்க வேண்டும். படத்தின் முன்பு வாழை இலை ஒன்றை விரித்து அதன் மேல் அரிசி பரப்பி கலசத்தை வைத்து கலசத்தில் நீர், வாசனைப் பொருட்கள், நாணயம் மாவிலை போட்டு அதன் மேல் மஞ்சள் பூசிய தேங்காய் வைக்கவும்.
முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கி, மஞ்சள் பிள்ளையார் பிடித்து அவருக்கு பூஜை செய்ய வேண்டும். முடிந்தால் நவகிரகங்களை ஆவாஹனம் செய்து பூஜையை மேற்கொள்ள வேண்டும். குடும்ப நலனுக்காகவும் வேண்டிய காரியங்கள் நிறைவேறவும் பூஜையை தொடங்குவதாக சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கலசத்தில் சத்யநாராயணரை ஆவாஹனம் செய்து துதித்து மந்திரங்களை கூற வேண்டும். சந்தனம், குங்குமம், பூக்கள், துளசி இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் ஊதுபத்தி ஏற்றி தீபாரதனை காட்ட வேண்டும். பிரசாதத்தை இறைவனுக்கு நிவேதனம் செய்து வணங்கவும்.
பூஜையின் மிக முக்கிய அம்சம் சத்யநாராயணர் கதை (ஐந்து அத்தியாயங்களை கொண்டது) படிக்க வேண்டும் அல்லது அனைவரும் ஒன்றாக கேட்க வேண்டும். இறுதியாக கற்பூர ஆரத்தி காட்டி அட்சதை தூவி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம், வெற்றிலைப் பாக்கு, பழங்கள் கொடுக்க வேண்டும்.
சத்யநாரயண பூஜை பலன்கள்:
இந்த பூஜையை எளிமையான முறையில் செய்தாலும் அதன் பலன்கள் மிகப் பெரிய அளவில் கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், செல்வம், பதவி உயர்வு ஆகிய அனைத்தையும் தரவல்ல பூஜையாகும். வாழ்க்கையில் அமைதி இல்லாமல் இருப்பவர்கள், வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கை கொண்டவர்கள், மன நிம்மதி இல்லாமல் தவித்து வருபவர்கள், ஆரோக்கிய குறைபாடு இருப்பவர்கள் இந்த பூஜையை மேற்கொள்ளலாம். இதனால் குடும்பத்தில் மங்கலம் பெருகும். வீட்டில் வளர்ச்சியும், வெற்றியும் உண்டாகும்.
விஷ்ணுவின் அவதாரமான சத்யநாராயணரை உண்மையான பக்தியுடனும், முழு நம்பிக்கையுடனும் வழிபட்டு பூஜையின் பலன்களையும், சத்யநாராயணரின் அருளையும் முழுமையாகப் பெறுங்கள்.