ராகு, கேது ஆகியோர் மனிதனுடைய வாழ்வில் முக்கியமானவர்கள். ராகுவின் காலத்தை, ராகு காலம் எனவும் கேதுவின் காலத்தை எமகண்டம் எனவும் நாம் குறிப்பிட்டு வருகிறோம். இந்த காலங்களில் எந்த நல்ல காரியங்களையும் செய்யக்கூடாது என பெரும்பாலும் ஒதுங்கிக் கொள்கிறோம். ஆனால் இந்த நேரத்தில் சில காரியங்கள் செய்யும்போது நல்ல பலன்கள் கிடைக்கின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
ஒரு நபருடைய ஜாதகத்தில் ராகு எந்த கிரகத்துடன் இணைகிறாரோ அந்த கிரகத்தின் பலன் கூடுதலாக உயரும் என ஜோதிடர்கள் கூறுவார்கள். இதே மாதிரி கேது எந்த கிரகத்துடன் இணைகிறாரோ அதன் பலன் தடுக்கப்படுகிறது. குறுகிய காலத்தில் ஒருவர் வளர்ச்சியடைந்தால் அவருக்கு ராகுவின் ஆதிக்கம் உதவுகிறது. ஒருவருக்கு எல்லா தகுதியும், திறமையும் இருந்து அவர் முன்னேறவில்லை என்றால் கேதுவின் ஆதிக்கம் உள்ளது என ஜோதிட நிபுணர்கள் சொல்கின்றனர். நம் வாழ்வில் நமக்கு வரக்கூடிய தடைகளை நீக்க ராகு மற்றும் எமகண்ட காலத்தில் சில வழிபாடுகளை செய்தால் பலன் கிடைக்கும்.
நல்ல காரியங்களை தொடங்கவும், முகூர்த்த தேதியை குறிக்கவும், 1 மனையில் ஆரம்ப நிலையை குறித்து பேசவும் நல்ல நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். அது தவிர ஜாதகம் பார்த்து நம் கர்ம வினைகளை தீர்க்க ராகு, எமகண்ட காலத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ராகு காலத்தில் செய்யும் பரிகாரங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வீடு எப்போதும் சுத்தமாக இருப்பதை விரும்புபவர்கள் ராகு, எமகண்ட காலத்தில் வீட்டை சுத்தம் செய்யலாம். இதனால் வீடு சுத்தமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
மருத்துவ செலவு!
அதிகமான மருத்துவ செலவுகள் இருப்பவர்கள் ராகு, எமகண்ட காலத்தில் மருந்துகள் உண்பதன் மூலம் மருத்துவ செலவுகள் குறையும் என்பது நம்பிக்கை. நமக்கு ஏதாவது கெட்ட பழக்கங்கள் இருந்தால் அவை விலக நாம் செய்யக்கூடிய பரிகாரங்களை ராகு, எமகண்ட காலத்தில் செய்வதால் அந்த தீய பழக்கங்கள் ஒரேடியாக நம்மை விட்டு அகலும்.
இதையும் படிங்க: அட்சய திருதியை ஏப்ரல் 22ஆம் தேதியா? 23ஆம் தேதியா? எந்த நாளில் தங்கம் வாங்க வேண்டும்!!
உங்களிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களை கைவிட ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். எமகண்டத்தில் விநாயகப் பெருமானையும், அனுமனையும் வழிபாடு செய்ய வேண்டும். ராகு என்பதை மாயை என்கிறோம். ஏனென்றால் ஏதேனும் ஒன்றில் அடிமையாக்கி வைத்துவிடும். ஒருவரின் வாழ்வில் பண பற்றாக்குறை ஏற்பட்டாலும், வீட்டில் துணையோ, குழந்தைகளோ அவர்களின் பேச்சை கேட்காமல் இருந்தாலோ, செலவுகள் அதிகமானாலோ ராகு காலத்தில் வழிபாடு செய்யலாம்.
மனை விற்க முடியாதவர்கள், திருமண தடையால் சிரமப்படுபவர்கள், வேலையின்மை பிரச்சனை ஆகியவற்றை சந்திப்பவர்கள் எமகண்டத்தில் வழிபாடு செய்யலாம். கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரர் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபட்டால் நோய்கள் அனைத்தும் விலகி ஆரோக்கியமாக இருப்போம் என்பது ஐதீகம். ராகுவால் வரும் எல்லா பாதிப்புகளையும் நீக்கி துர்க்கை அம்மன் நம்மை பாதுகாப்பார்.
திருச்சி மலைக்கோட்டையில் அமைந்துள்ள விநாயகரை எமகண்ட காலத்தில் வழிபாடு செய்வதால் கெட்ட வினைகள் நீங்கி நல்லதே நடக்கும். கேது பகவானுக்கு உரிய தெய்வமான பழனி முருகனை வணங்கினால் கேதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து வாழ்க்கை முன்னேற்றம் வரும்.
இதையும் படிங்க; சூரிய கிரகணம் – எதை எல்லாம் செய்யலாம்! கண்டிப்பாக கர்ப்பிணிகள் தேங்காய் வைத்து கொள்ள வேண்டும்.. ஏன் தெரியுமா?