
நவராத்திரி என்றாலே வீட்டில் கொலு, அம்பாள் வழிபாடு, விளக்கேற்றுதல், சுண்டல், தாம்பூலம் என ஆன்மிகமும் கொண்டாட்டமும் களைகட்டும். ஆனால், இந்த 9 நாட்களிலும் ஒரே அம்மனை வழிபடாமல், ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு திருவுருவங்களை வழிபட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
துர்கையின் வீர வடிவம் முதல் லட்சுமியின் செல்வ அருள், சரஸ்வதியின் கல்வி ஞானம் வரை, நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் தனித்துவமான ஆன்மிக முக்கியத்துவம் இருப்பதாக சாக்த மரபுகளில் கூறப்படுகிறது. குறிப்பாக நவதுர்கை எனப்படும் அம்பிகையின் 9 வடிவங்களையும் ஒவ்வொரு நாளும் வழிபடுவது சிறப்பானதாக பக்தர்கள் கருதுகின்றனர்.
அந்த வகையில், நவராத்திரியின் 9 நாட்களில் எந்த நாளில் எந்த தேவியை வழிபட வேண்டும்? அவர்களின் சிறப்பு என்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதல் நாள் - சைலபுத்ரி தேவி
நவராத்திரியின் முதல் நாளில் சைலபுத்ரி தேவியை வழிபடுவதாக நவதுர்கை மரபு கூறுகிறது.
பெயர்க்காரணம் : சைலம் என்றால் மலை என்றும், புத்ரி என்றால் மகள் என்றும் பொருள். இமயமலை மன்னன் இமவான் (பர்வ ராஜன்) - மெனாவதி தம்பதியரின் மகளாகப் பிறந்ததால் இவருக்கு சைலபுத்ரி என்று பெயர்.
தோற்றம்: மலையரசனின் மகளாகவும், பார்வதி தேவியின் அம்சமாகவும் கருதப்படும் இவர், வலது கையில் திரிசூலமும், இடது கையில் தாமரையும் ஏந்தி, நந்தி எனப்படும் காளை வாகனத்தில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் சித்தரிக்கப்படுகிறார்.
ஆன்மிக முக்கியத்துவம்
நவதுர்கையின் முதல் வடிவமாக விளங்கும் சைலபுத்ரி, சக்தியின் அடிப்படை வடிவம், மன உறுதி மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக கருதப்படுகிறார். குடும்ப நலம், மனத் தெளிவு, தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கையில் நிலைத்தன்மை கிடைக்க இவரை வழிபடுவது சிறப்பு என்ற ஆன்மிக நம்பிக்கை உள்ளது.
2. பிரம்மச்சாரிணி தேவி
தவம் மற்றும் ஆன்மிக ஒழுக்கத்தின் வடிவமாக இவர் போற்றப்படுகிறார். சிவபெருமானை கணவராக அடைய இமயமலைச் செல்வியான பார்வதி தேவி கடுமையான தவம் மேற்கொண்டார் என புராணக் கதை கூறுகிறது.
தோற்றம்: வெண்மை நிற ஆடை அணிந்து வலது கையில் ஜபமாலையும், இடது கையில் கமண்டலமும் ஏந்தியபடி, காலில் செருப்பு இல்லாமல் நடக்கும் தவக்கோலத்தில் சித்தரிக்கப்படுகிறார்.
அதிபதி: கேது கிரகத்தின் ஆதிக்கம் கொண்டவர்.
ஆன்மிக முக்கியத்துவம்
மன அமைதி, பொறுமை, தன்னம்பிக்கை, ஆன்மிக முன்னேற்றம் ஆகியவை கிடைக்கும் என்ற ஆன்மிக நம்பிக்கையில் பிரம்மச்சாரிணியை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
3. சந்திரகாண்டா தேவி
சந்திரகாண்டா தேவி என்பது நவராத்திரியின் மூன்றாம் நாளில் வழிபடப்படும் துர்கா தேவியின் மூன்றாவது வடிவமாகும்
பெயர்க்காரணம்: இவரது நெற்றியில் மணி வடிவில் பிறைச்சந்திரன் இருப்பதால் இவருக்கு சந்திரகாண்டா என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக 10 கரங்களுடன், பொன்னிற மேனியும், திறந்த மூன்றாவது கண்ணும் கொண்டுள்ள இவர் புலி மீது அமர்ந்து காட்சியளிக்கிறார். கைகளில் திரிசூலம், வாள், வில், அம்பு, தாமரை, கமண்டலம் போன்ற ஆயுதங்களையும் அபய முத்திரையையும் ஏந்தியுள்ள இவர் வீரமும் கருணையும் இணைந்த வடிவமாகபோற்றப்படுகிறார்.
ஆன்மிக நம்பிக்கை
பயம், எதிர்மறை எண்ணங்கள், தடைகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கவும், தைரியம் அதிகரிக்கவும் இவரை வழிபடுவதாக நம்பப்படுகிறது.
4. கூஷ்மாண்டா தேவி
பிரபஞ்சத்தை உருவாக்கிய ஆதிசக்தியின் வடிவமாக கூஷ்மாண்டா தேவி போற்றப்படுகிறார். கூஷ்மாண்டா என்ற சொல்லில் கூஷ் என்றால் புன்சிரிப்பு, அண்டம் என்றால் உலகம் என்று பொருள்.
சூரிய மண்டலத்தின் மையத்தில் வசிக்கும் ஆற்றல் கொண்டவர். சூரியனுக்கு ஒளியையும் சக்தியையும் வழங்குபவர் இவரே.
இவருக்கு எட்டு கைகள் இருப்பதால் “அஷ்டபுஜா தேவி” என்றும் அழைக்கப்படுகிறார். தன் கைகளில் சக்கரம், வில், அம்பு, தாமரை மலர், கமண்டலம், அமிர்த கலசம் மற்றும் ஜெபமாலை ஆகியவற்றை ஏந்தியுள்ள இவர் சிங்கத்தை வாகனமாகக் கொண்டு காட்சியளிக்கிறார்.
ஆன்மிக நம்பிக்கை
உடல் மற்றும் மன ஆற்றல், வளம், குடும்ப மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக இவரை வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
5. ஸ்கந்தமாதா
பெயர்க்காரணம்: ஸ்கந்தன் என்பது முருகப்பெருமானின் மற்றொரு பெயர். முருகப்பெருமானை குழந்தை வடிவில் மடியில் தாங்கியபடி காட்சியளிக்கும் தாயின் வடிவம்.
இவருக்கு நான்கு கரங்கள் உள்ளன. சிங்கத்தின் மீது அமர்ந்து ஒரு கையில் குழந்தை ஸ்கந்தனை (முருகனை) தாங்கியிருப்பார். மற்றொரு கை அபய முத்திரையில் இருக்கும். மீதமுள்ள இரு கைகளில் தாமரை மலர்களை ஏந்தியிருப்பார்.
ஆன்மிக சிறப்பு
தாய்மை, அன்பு, பாதுகாப்பு, கருணை ஆகியவற்றை பிரதிபலிக்கும் தேவியாக பக்தர்கள் வழிடுகின்றனர்.
6. காத்யாயனி
காத்யாய முனிவர் தவம் செய்து வழிபட்டு பேறு பெற்றதால், பார்வதி தேவி இவருடைய மகளாக அவதரித்து காத்யாயனி என்ற பெயர் பெற்றார்.
நான்கு கைகளைக் கொண்டுள்ள இவள், ஒரு கையில் வாளும், மற்றொரு கையில் தாமரை மலரும் ஏந்தியிருப்பார். மற்ற இரு கைகளில் அபய மற்றும் வரத முத்திரைகளைக் காட்டி, சிம்ம வாகனத்தில் காட்சியளிப்பார்.
ஆன்மிக சிறப்பு
தீமையை எதிர்த்து போராடும் மனவலிமை, துணிச்சல், வெற்றி ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.
7. காலராத்திரி
தோற்றம்: நவதுர்கைகளில் மிகவும் உக்கிரமான தோற்றங்களில் ஒன்றாக இவர் கருதப்படுகிறார். கருமையான நிறம், விரிந்த கூந்தல், மூன்று கண்கள், உக்கிரமான முகம் ஆகியவற்றுடன் சித்தரிக்கப்படுகிறார்.
கைகளில் அபய மற்றும் வரத முத்திரைகள், வஜ்ராயுதம், வளைந்த வாள் போன்ற ஆயுதங்களுடன் கழுதை வாகனத்தில் காட்சியளிப்பதாக திருவுருவ மரபுகள் கூறுகின்றன.
ஆன்மிக சிறப்பு
பயம், இருள், தீய சக்திகள் ஆகியவற்றை அழித்து பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக நம்பப்படுகிறது.
8. மகாகௌரி
பெயர்க்காரணம்: மகா என்றால் பெரிய அல்லது உயர்ந்த, கௌரி என்றால் ஒளிமிக்க, வெண்மையானவள். எனவே மிகுந்த ஒளியுடன் விளங்குபவள் என்ற பொருளில் மகாகௌரி என அழைக்கப்படுகிறார்.
இவர் வெண்மை நிறமானவர். காளை மாட்டின் மீது அமர்ந்து தனது நான்கு கரங்களில் சூலம், டமருகம் ஏந்தி, அபய மற்றும் வரத முத்திரைகளைக் காட்டுகிறார்.
பார்வதி தேவி சிவபெருமானை அடைய தீவிர தவம் இருந்தபோது, உடல் கறுநிறமானது. பின்னர் கங்கை நீரில் நீராடியதால் தனது ஒளிரும் வெண்மை நிறத்தை மீட்டெடுத்தார். இதனால் மகாகௌரி என அழைக்கப்படுகிறார்.
ஆன்மிக சிறப்பு
தூய்மை, அமைதி, மனநிம்மதி, மங்களம் ஆகியவற்றின் அடையாளமாக வழிபடப்படுகிறார்.
9. சித்திதாத்ரி
சித்தி என்பது ஆன்மிக நிறைவு அல்லது சிறப்பு சக்தி. தாத்ரி என்பது வழங்குபவர் என்றும் பொருள். எனவே சித்திகளை வழங்குபவள் என்பதே சித்திதாத்ரி என்ற பெயரின் பொருள்.
நவதுர்கைகளில் இறுதி வடிவமாக கருதப்படும் இவர், முழுமையான தெய்வீக சக்தியின் அமைதியான வடிவமாக போற்றப்படுகிறார்.
நான்கு கரங்களைக் கொண்டுள்ள இவள், தாமரை, சக்கரம், சங்கு, கதாயுதம் போன்றவற்றை தன் கைகளில் ஏந்தியவாறு சித்தரிக்கப்படுகிறார். தாமரை ஆசனத்தில் அமர்ந்த திருக்கோலமும் பரவலாகக் காணப்படுகிறது.
ஆன்மிக சிறப்பு
ஞானம், ஆன்மிக நிறைவு, சித்தி மற்றும் தெய்வீக அருள் ஆகியவற்றை வழங்குபவளாக பக்தி மரபுகளில் போற்றப்படுகிறார்.
சைலபுத்ரி - தொடக்கம்
பிரம்மச்சாரிணி - தவம்
சந்திரகாண்டா - வீரியம்
கூஷ்மாண்டா - படைப்பு
ஸ்கந்தமாதா - தாய்மை
காத்யாயனி - போராட்டம்
காலராத்திரி - தீமையை அழித்தல்
மகாகௌரி - தூய்மை
சித்திதாத்ரி - ஆன்மிக நிறைவு