மகாளய பட்சத்தில் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தரும் ஆறு பொருட்கள்

First Published | Sep 27, 2023, 5:03 PM IST

மகாளய பட்சம் தொடங்கிவிட்டால் எதுவும் வாங்கக் கூடாது என்பார்கள். ஆனால், ஒருசில பொருட்களை வாங்கி தானம் செய்வது முன்னோர்களை மகிழ்விக்கும் என்று நம்பப்படுகிறது.

மகாளய பட்சம்:

நாளை மறுநாள் (செப்டம்பர் 29ஆம்) மகாளய பட்சம் தொடங்கி, அக்டோபர் 16 தேதி வரை இருக்கிறது. இந்த நாட்களில் புதிய ஆடைகளை வாங்கக்கூடாது என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பலரும் வீட்டுக்கு புதிய பொருட்கள் எதையும் வாங்குவதைத் தவிர்ப்பார்கள். ஆனால், ஒரு 6 பொருட்களை மட்டும் இந்த நாட்களில் வாங்குவது முன்னோர்களை மகிழ்விக்கும் என்று நம்பப்படுகிறது.

கருட புராணத்தில் மகாளயம்:

தமிழ் வருடத்தில் புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு முன்னதாக 14 நாட்களே மகாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. மகாளயத்தின்போது காலமானவர்களின் ஆன்மா எமனின் அனுமதி பெற்று, சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக பூமிக்கு வந்து இளைப்பாறுவதாக கருடபுராணம் கூறுகிறது. இந்த மகாளய பட்ச நாட்களில் என்னென்ன பொருட்களை வாங்கினால் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம் என்று இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

Tap to resize

கருப்பு எள்:

மகாளய பட்ச நாட்களில் கருப்பு எள் வாங்கலாம். கருப்பு எள் தர்ப்பணம் செய்யும் போது பயன்படுத்தப்படுகிறது. மகாவிஷ்ணுவுக்கு பிடித்த பொருள் என்ற பெருமையும் கறுப்பு எள்ளுக்கு உண்டு. மகாளய பட்சத்தில் கறுப்பு எள் வாங்கி தானம் செய்து முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.

கோதுமை:

கோதுமையும் மகாளய பட்சத்தின்போது வாங்கலாம். பூமியில் உருவானதும் முதன்முதலில் உற்பத்தி செய்யப்பட்ட தானியம் கோதுமை என்று கருதப்படுகிறது. இதனால் கோதுமை தங்கத்துக்கு நிகராக மதிக்கப்படுகிறது. மகாளய பட்ச நாட்களில் கோதுமையை வாங்கியும் தானம் செய்யலாம்.

அரிசி:

அரிசியையும் மகாளய பட்சத்தின்போது வாங்கலாம். அரிசியும் சிரார்த்தம் செய்யும்போது பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. அரிசி வெள்ளிக்கு நிகரான பொருளாகக் கருதப்படுகிறது. மகாளய பட்சத்தில் முன்னோர்களை வேண்டிக்கொண்டு அரிசியை தானம் செய்தால் பணவரவு உண்டாகும்.

வெண்ணிற மலர்கள்:

பிச்சி, மல்லி, முல்லை போன்ற வெண்ணிற மலர்களைக் கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். இதுபோன்ற வெள்ளைப் பூக்கள் முன்னோருக்கு விருப்பமானவை. மகாளய பட்சத்தின்போது இவற்றை வாங்கி முன்னோரை வழிபடுவதால் அவர்களின் பூரண ஆசீர்வாதம் கிடைக்கும்.

எண்ணெய்:

மகாளய பட்சத்தில் முன்னோர்களுக்கு எண்ணெய் வாங்கி அர்ச்சனை செய்யலாம். எண்ணெய் வாங்கி முன்னோருக்கு தானம் செய்வதன் மூலமும் அவர்களின் முழு ஆசியையும் பெறலாம்.

வஸ்திரம்:

மகாளய பட்சத்தை ஒட்டி முன்னோர்களுக்கு புதிய வஸ்திரங்கள் வாங்க வேண்டும். அந்தப் புது வஸ்திரங்களை முன்னோர்களை எண்ணி பிரார்த்தனை செய்து தானமாகக் கொடுத்தால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

Latest Videos

click me!