கந்தசாமி சன்னிதியில் விபூதிக்கு பதிலாக கரும்பு சக்கைகளை எரித்து தயாரிக்கப்பட்ட சாம்பல்தான் பிரசாதமாக இங்கு வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் மருத்துவ குணங்கள் கொண்டதாக கருதப்படுகிறது. இதனை அருமருந்து என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள். கரிய நிறத்தில் மணல் போல இது இருக்கும். இந்த பிரசாதம் தயாரிக்க சுற்றிலும் உள்ள கரும்பு விவசாயிகள் தாங்களே முன்வந்து கோவிலுக்கு கரும்புகளை தந்து மகிழ்கிறார்கள். பக்தர்கள், தங்கள் நிலத்தில் கரும்பு பயிரிட்டதும் நாங்கள் கோயிலுக்கு விபூதியாக கொண்டுவந்து தருகிறோம் எனக் கூறுவார்.
சிலர் நேர்த்திக்கடன் ஆகவும் இங்கு கரும்புகளை கொடுப்பார்.அதன்படி விரதமிருந்து, கரும்பு சக்கைகளை எரித்து கிடைக்கும் சாம்பலை சுத்தப்படுத்தி, கோவிலில் கொடுக்கின்றனர். இப்படி பக்தியுடன் கொடுக்கப்படும் சாம்பலை, மூலவர் முன் வைத்து சிறப்பு பூஜை செய்து, வேறு எந்த கலப்பும் செய்யாமல், அப்படியே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மணம் எதுவும் இல்லாத இந்த பிரசாதம் மனிதர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளின் நோய்களையும் தீர்க்கும் மகத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.