
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் அமைந்துள்ளது சந்திரசூடேஸ்வரர் கோவில். மூலவர் லிங்க வடிவில் அருள் பாலிக்கின்றார் அவரது பெயர் சந்திர சூடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. பச்சையம்மன், பர்வதம்மன் என்ற பெயர்களும் உள்ளன.இத்தலத்து இறைவி மரகதப் பச்சை நிறம் கொண்ட திருமேனி உடையவர். தமிழ்நாட்டில் மலைமீது அமைந்த ஒரு சில சிவாலயங்களில் இந்த சந்திரசூடேஸ்வரர் கோவிலும் ஒன்று. மலை மேல் அமைந்துள்ள இக்கோவிலை அடைய சுமார் 200 படிகள் உள்ளன. வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையானது இத்தலம். ஹொய்சளர்களால் ஆளப்பட்ட இவ்வூர் ஹோசூர் என்ற பெயர் பெற்றது. இம்மாவட்டத்தில் தங்கத்தேர் அமைந்த ஒரே கோவில் இது ஒன்றேயாகும்.
பார்வதி தேவியிடம் ஒரு திருவிளையாடலை நடத்தினார், ஈசன். ஒளிவீசும் உடும்பு வடிவம் கொண்டு கயிலை மலையின் உத்தியான வனத்தில் இருந்த பார்வதிதேவிக்கு அருகே வந்தார். அந்த அதிசய உடும்பைக் கண்ட பார்வதி, அதைப் பிடிக்க தோழிகளுடன் சென்றார். உடும்பானது, அவர்களின் கைகளில் அகப்படாமல் காடு, மலைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தேவி அந்த உடும்பின் வாலை பிடிக்க, அவரது உடல் பச்சை நிறமானது. இதற்கிடையில் பார்வதியுடன் வந்த தோழிகள், அவரைப் பிரிந்து கானகம் முழுவதும் அலைந்தனர். தாகம் அவர்களை வாட்டியது. கண்ணுக்கு எந்த ஆறோ, குளமோ தென்படவில்லை. அவர்கள் பார்வதியை நினைத்து தங்கள் தாகத்தைத் தீர்க்க வேண்டினர். உடனே பார்வதி தேவி, ஒரு குளத்தை உருவாக்கினாள்.
அதில் தன் தோழிகளுடன் பார்வதி இறங்கி நீராடினாள். அப்போது அந்தக் குளமே பச்சை நிறமாக மாறியது.பார்வதி நீராடியபோது அவள் கண்களை விட்டு மறைந்த உடும்பானது, அருகில் உள்ள மலைமீது ஏறிச்சென்றது. இதைக்கண்ட தேவி, அதைப் பின்தொடர்ந்து அந்த மலைமீது ஏறினாள். மலை உச்சியில் இருந்த செண்பக மரத்தில் உடும்பு ஏறியது. அப்போது அங்கு தவமிருந்த முத்கலன் என்ற முனிவர் உடும்பைப் பார்த்தார். அவர் சற்று தொலைவில் இருந்த இன்னொரு முனிவரான உச்சாயணனை கூவி அழைத்தார். அவர்கள் இருவரும் உடும்பை பிடிக்க முயன்றபோது அது மறைந்தது. அதனால் பார்வதி திகைத்தாள். பொன்னிற உடும்பு மறைந்ததற்கு, முனிவர்கள் இருவர்தான் காரணம் என்று நினைத்த பார்வதிதேவி, அவர்கள் மீது கோபம் கொண்டாள். உடும்பைக் கண்டு கூவியவரைஊமையாகும்படியும், சத்தம் கேட்டு ஓடிவந்தவரை செவிடாகும்படியும், அவர்கள் இருவரும் வேடுவ குலத்தில் பிறக்கும்படியும் சாபமிட்டாள். அதைக் கேட்டு முனிவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பார்வதி தேவியிடம் தங்கள் தவறை மன்னிக்கும்படி வேண்டினர்.
பார்வதியும் கோபத்தில் சிவ பக்தர்களை சபித்ததை எண்ணி வருந்தினார். பின்னர் சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தாள். அப்போது ஈசன் அங்கு தோன்றி, “தருமதேவனுக்கு அளித்த வாக்கின்படி, சில காலம் தங்கி இருக்கவே நான் உடும்பு வடிவில் வந்தேன். அதோடு தேவியும் என்னோடு இங்கு தங்க வேண்டும் என்பதற்காகவே இந்த திருவிளையாடல் நடத்தினேன். நீங்கள் சாபம் பெற்றாலும், வேடுவ குலத்தில் பிறந்து வேட்டையாடிவரும்போது, உடும்பாக என்னைக் காணும்போது சாப விமோசனம் பெறுவீர்கள்” என்று முனிவர்களுக்கு அருளினார். அதன்படி வேடுவர்களாக பிறந்த அந்த இரண்டு முனிவர்களும், அதே மலை மீது உடும்பைக் கண்டு, சாபத்தில் இருந்து மீண்டனர். பின்னர் அவர்கள் ஈசனுக்காக அங்கு ஆலயத்தை எழுப்பினார்கள்.
தர்மதேவனுக்கு அருள் புரிந்த சந்திர சூடேஸ்வரர்: தருமதேவன், சிவனை நோக்கி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கடுந்தவம் புரிந்தார். தவத்தின் பயனாக தனக்கு காட்சியளித்த இறைவனிடம், தன்னை வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி தருமதேவன் வேண்டுகோள் வைத்தார். அதன்படியே தருமதேவனை, தன்னுடைய வாகனமாக, காளையாக மாற்றிக் கொண்டார். இதனால் மகிழ்ந்த தருமதேவன். சிவபெருமான் அதாவது சந்திர சூடேஸ்வரர் தர்ம தேவனுக்கு அருள் புரிந்ததாக வரலாறு கூறப்படுகிறது
சுயம்பு மூர்த்தியாக இருக்கும் சந்திர சூடேஸ்வரரை நம் கண்டால் நம் மீது இருக்கும் பாவங்கள் அனைத்தும் தீர்ந்து தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. அன்னை அம்பிகையை தரிசித்து வந்தால் குழந்தை பாக்கியம் செல்வம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.