தமிழ் புத்தாண்டு 2023: சித்திரை கனியை காண்பது எப்படி? என்ன பொருள் வாங்கினால் வீட்டில் செல்வம் குவியும்!!

First Published | Apr 13, 2023, 10:03 AM IST

Tamil New Year 2023: தமிழ் புத்தாண்டு தினத்தன்று எப்படி வழிபாடு செய்தால், அந்த ஆண்டு முழுவதும் ஆசிர்வாதமாக இருக்கும் என்பதை இங்கு காணலாம். 

தமிழ் மாதங்களிலேயே முதல் மாதமான சித்திரையின் தொடக்க நாளை தான் (சித்திரை 1) தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவார்கள். இதனை சித்திரை பிறப்பு, சித்திரை கனி, தமிழ் புத்தாண்டு, சங்கராந்தி, விஷூ (கேரளா) ஆகிய பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள். 

தமிழ் புத்தாண்டு 2023 எப்போது? 

சூரிய பகவான், மேஷ ராசியில் இருந்து மறுபடியும் பயணத்தைத் தொடங்கும் காலம் தான் தமிழ் புத்தாண்டாகும். இந்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சுபகிருது வருடம் முடிவடைந்து சோபகிருது வருடம் பிறக்கவிருக்கிறது. அன்றைய தினம் சித்திரை கனி பார்ப்பது ரொம்பவும் சிறப்பு வாய்ந்தது. அதென்ன சித்திரை கனி? வாருங்கள் பார்க்கலாம். 

Tap to resize

தமிழ் புத்தாண்டு வழிபாடு! 

தமிழ் புத்தாண்டு வழிபாடு செய்ய விரும்புபவர்கள் முந்தைய நாளே எல்லாவற்றையும் தயாராக வைக்க வேண்டும். வீட்டைத் தூய்மையாக சுத்தம் செய்துவிட்டு பூஜையறையில் உள்ள சுவாமி திருவுருவ படங்களை துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். தமிழ் புத்தாண்டிற்கு முந்தைய நாள் இரவில் ஒரு தட்டில் மாம்பழம், பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் அடுக்கி வைக்க வேண்டும். இதனுடன் மற்ற பழங்களையும் வைக்கலாம். ஆனால் 1 எலுமிச்சை பழம் கட்டாயம் வைத்துவிடுங்கள். வெற்றிலை, பாக்கு அதனுடன் வீட்டில் இருக்கும் தங்க நகையும் வைக்கலாம். 

சித்திரை கனி என்றால் என்ன? 

சித்திரை கனி காண்பதற்கு மூன்று விஷயங்கள் தேவை. உங்கள் வீட்டில் ரூபாய் நோட்டு கட்டு இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை வைக்கலாம். இல்லாதபட்சத்தில் ஏதேனும் ஒரு ரூபாய் நோட்டோ, சில்லறை காசுகளையோ வைத்து கொள்ளலாம். இந்த தட்டில் பழங்கள், நகைகளையும் வைக்க வேண்டும். இதற்கு முன்பு கண்ணாடி ஒன்றினை வைத்து கொள்ளுங்கள். தமிழ் புத்தாண்டு தினத்தில் நீங்களும், குடும்பத்தினரும் காலையில் எழுந்ததும் தட்டில் இருக்கும் பழங்கள், பணம், நகை போன்றவற்றை தான் முதலில் காண வேண்டும். பின்னர் கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு மகாலட்சுமியை மனதார நினைத்து, பணத் தட்டை தொட்டு வணங்கி கொள்ளுங்கள். அதன் பின்னர் அன்றைய வேலைகளை செய்ய தொடங்குங்கள்.  

தமிழ் புத்தாண்டு பூஜை 

காலையில் நீராடிய பிறகு பூஜையறையில் தீபம் ஏற்றி வையுங்கள். முக்கனிகள் வைத்திருக்கும் தட்டிற்கு தூப ஆராதனை செய்யுங்கள். புத்தாண்டு சமையலில் கண்டிப்பாக அறுசுவைகள் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். கொஞ்சம் கசப்பும் இருப்பது அவசியம். அதனால் தான் முன்னோர் வேப்பம்பூ பச்சடி, வேப்பம்பூ ரசம் போன்றவை செய்வார்கள். மாங்காய் பச்சடி செய்வது புளிப்பை கொடுக்கும். இந்த அறுசுவை உணவுகளை சுவாமிக்கு படைக்க வேண்டும். பூஜை மற்ற வழிபாடுகள் முடிந்த பின்னர் வீட்டு பெரியவர்களிடம் ஆசி வாங்குங்கள். அப்படி ஆசி பெற்று அவர்களிடம் வாங்கும் பணத்தை, நம்முடைய பணப்பையில் வைக்கும் போது செல்வம் குவியும் என்பது ஐதீகம். 

இதையும் படிங்க: பணத்தை மிச்சம் பண்ண முடியலயா? துளசி செடியை இந்த இடத்தில் வச்சு பாருங்க! வீட்டில் பணமழை தான்!

தமிழ் புத்தாண்டில் என்ன வாங்க வேண்டும்? 

தமிழ் புத்தாண்டு தினத்தில் உப்பு, மஞ்சள், அரிசி, கற்கண்டு ஆகிய பொருட்களை வாங்கினால் சிறப்பு. இந்த பொருள்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கருதப்படுகிறது. இவற்றை தமிழ் புத்தாண்டு நாளில் வாங்கி வீட்டில் வைக்கும்போது, இந்த வருடம் முழுவதும் எந்த குறையும் ஏற்படாது என்பது ஐதீகம். தமிழ் புத்தாண்டு தினத்தில் பசுவிற்கு அகத்திக் கீரை கொடுக்கலாம். கோதுமை உணவுகளையும் தீவனமாக அளிக்கலாம். குறைந்தபட்சம் 2 பேருக்கு உணவளிக்கலாம். 

தமிழ் புத்தாண்டு பூஜை பலன்கள்! 

இந்தாண்டு தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமையில் வருவது மங்கலகரமானது என கருதப்படுகிறது. ஏனென்றால் வெள்ளி அன்று மகாலட்சுமி வழிபாட்டுக்குரிய நாள். இந்தாண்டு மற்றொரு சிறப்பு என்னவென்றால், சித்திரை முதல் நாளில் திருவோண நட்சத்திரமும் இணைந்து வருகிறது. பெருமாளின் விரத தினமான இந்த நன்னாளில் பெருமாளுடன், மகாலட்சுமியையும் சேர்த்து வழிபட்டால் வீட்டில் செல்வம் குவிவதை யாராலும் தடுக்க முடியாது.  

இதையும் படிங்க: உங்க சமையலறையில் இந்த 4 பொருட்கள் வெச்சுக்காதீங்க! எந்த பொருள் எப்படி இருந்தால் குடும்பத்திற்கு நல்லது?

Latest Videos

click me!