Halasuru Someshwara Temple: பெங்களூருவில் உள்ள ஹலசுரு சோமேஸ்வரர் கோவிலில் திருமணங்கள் நடத்தி வைப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தி உள்ளது. அதற்கான அதிர்ச்சியூட்டும் காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பெங்களூரு ஹலசுரு இந்து அறநிலையத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது சோழர் காலத்தைச் சேர்ந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாகும். இந்தக் கோவில் எப்போதும் திருமண கூட்டங்களால் நிறைந்து காணப்படும். ஆனால் தற்போது அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள் காரணமாக இங்கு திருமணங்கள் நடத்துவதை கோவிலில் நிர்வாகம் நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. சுமார் ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கோவில் நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருந்தாலும், சமீபத்தில் ஒரு பக்தர் அளித்த புகாரின் காரணமாக தற்போது இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
24
அர்ச்சகர்களுக்கு ஏற்படும் சிரமங்கள்
சில ஆண்டுகளாக இந்த கோவிலில் நடந்து வரும் திருமணங்கள் பிரிவில் முடிகின்றன. தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகும் பொழுது திருமணத்தை நடத்தி வைத்த அர்ச்சகர்களை சாட்சியாக ஆஜராகுமாறு நீதிமன்றங்கள் அடிக்கடி சம்மன் அனுப்புகின்றன. கோவிலில் சடங்குகள் செய்வதை விட அர்ச்சகர்கள் நீதிமன்றத்திற்கு அடிக்கடி செல்வதால் தினமும் செய்ய வேண்டிய பூஜை மற்றும் சடங்குகளை செய்ய முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. இது அர்ச்சகர்களுக்கு மன உளைச்சல்களையும், கோவில் பணிகளில் தொந்தரவையும் ஏற்படுத்துகிறது.
34
கோவில் நற்பெயருக்கு களங்கம்
விவாகரத்து வழக்குகள், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு அலைவது கோவிலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கோவில் நிர்வாகம் கருதுகிறது. மேலும் சிலர் வீட்டை விட்டு ஓடி வந்து குடும்பத்தினர் ஒப்புதல் இல்லாமல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து திருமணத்தை முடிக்கின்றனர். பின்னரை அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்கள் வந்து பிரச்சனை செய்வதால் கோவில் நிர்வாகம் தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் சட்ட சிக்கல்களில் சிக்கும் நிலை உருவாகிறது. இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க திருமணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ஹலசுரு சோமேஸ்வரர் கோவில் சோழர் காலத்தைச் சேர்ந்த சுமார் 800 ஆண்டுகள் பழமையான மற்றும் புகழ்பெற்ற கோயிலாகும். இங்கு திருமணம் செய்து வைப்பது என்பது மிகவும் சுகமாக கருதப்பட்டது. ஆனால் விரும்பத்தகாத நிகழ்வுகள் மற்றும் சட்ட சிக்கல்களால் தற்போது திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. மற்ற அனைத்து மதச் சடங்குகள், பூஜைகள், விழாக்கள் வழக்கம் போல் கோவிலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் சூழலை கருத்தில் கொண்டு சமூகத்தினருடன் கலந்தாலோசித்தப் பிறகு வருங்காலத்தில் இந்த முடிவு குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருமணத்தை நிறுத்தி வைக்கும் முடிவானது அர்ச்சகர்களின் பணி சுமையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், கோவிலின் புனிதத் தன்மையையும், நற்பெயரையும் காப்பது முதன்மையான நோக்கம் என்று கோவில் நிர்வாகம் விளக்கியுள்ளது.