
இந்து மத மரபுகளின்படி பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது என்பது திருமணமாகி கணவனுடன் வாழும் சுமங்கலியின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. இது மங்களகரமானதாகவும், கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும் செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. ஒரு பெண் கணவரை இழந்த பிறகு அவரது சுமங்கலி நிலை முடிந்து விடுவதாக நம்பப்படுகிறது. துக்க சடங்குகள் முடிந்த பிறகு நெற்றியில் உள்ள குங்குமம், கழுத்தில் உள்ள தாலி, காலில் உள்ள மெட்டி போன்ற திருமண சின்னங்கள் அகற்றப்படுவது பல சமூகங்களில் பின்பற்றப்படுகிறது. இதை செய்வதன் நோக்கம் கணவர் இல்லாத நிலையில் பெண் தன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறாள் என்பதை குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது இந்து மத வழக்கங்களின் படி கணவரை இழந்த பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வதில்லை.
அதேபோல் கணவரை இழந்த கைம்பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் முன்னே நிற்பதில்லை. சுப நிகழ்ச்சிகளில் விளக்கு ஏற்றுவது போன்ற வேலைகளையும் அவர்கள் செய்வதில்லை. இது குறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பெண்ணுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களில் மிகப்பெரிய துன்பம் கணவனை இழப்பது தான். தாய், தந்தை, உற்றார், உறவினர் ஏன் தன் குழந்தைகளை இழந்தால் கூட அவள் அப்படி துன்பப்படுவதில்லை. கணவரை இழந்த பின்னர் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் துன்பம் கொடிய துன்பமாகும். அந்த துன்பம் போல் உலகத்தில் வேறு எதுவும் இல்லை. அப்படி துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் பெண்ணை திரும்பத் திரும்ப நோகடிக்க வேண்டிய தேவை இல்லை.
அதுபோல் துன்பம் இனி வேறில்லை என்கிற நிலையில் இருப்பவரை, மறுபடியும் துன்பக்கடலில் ஆழ்த்துதல் கூடாது. அந்த காலத்தில் கணவனை இழந்த கைம்பெண்கள் பூஜை பொருட்களைத் தொடக்கூடாது, பிறரை பார்க்கக்கூடாது, பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்கக்கூடாது, வண்ணப் புடவைகளை அணியக்கூடாது போன்ற நிறைய கட்டுப்பாட்டுகள் இருந்தன. இது மனதை அடக்குதல் முறைக்காக செய்யப்பட்டவை. ஆனால் தான் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு பெண் தான் தீர்மானிக்க வேண்டும். இது போன்ற சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது. வீட்டில் விளக்கேற்றலாம திருவிளக்கு பூஜை செய்யலாமா? சுப நிகழ்ச்சிகளில் தான் முன்னின்று நடத்தலாமா? என்பது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் எழுந்துள்ளது.
கணவனை இழந்த கைம்பெண்கள் தாராளமாக வீட்டில் விளக்கு ஏற்றலாம். திருவிளக்கு பூஜை செய்யலாம். பூ வைத்துக் கொள்ளலாம். பொட்டு வைத்துக் கொள்ளலாம். பூஜை முறைகளும், பூ, பொட்டு ஆகியவை கணவனுக்குப் பிறகு வந்தது கிடையாது. இது பிறந்ததிலிருந்து பெண்களுக்கு உரியவை. இது தாய் வீட்டு சீதனம் போன்றவை. எனவே சுமங்கலி பூஜையைத் தவிர எல்லா விதமான வழிபாடுகளையும் செய்யுங்கள். வளைகாப்பு, காதுகுத்து, திருமண நிகழ்ச்சிகள், புதிய வீடு கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளில் விளக்கு ஏற்ற அழைத்தால் மறுக்காமல் சென்று விளக்கேற்றுங்கள். நல்ல மனது இருப்பவர்கள் விளக்கு ஏற்றினால் அந்த காரியம் நல்லபடியாக நடக்கும் என்பது ஐதீகம். எனவே கைம்பெண்கள் தங்கள் பிள்ளைகளின் சுப காரியங்களில் தாராளமாக முன் நின்று விளக்கேற்றுங்கள். உங்களை விட உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேறு யார் நினைத்து விட முடியும்.
உங்கள் மகனுக்கு திருமணம் நடக்கிறது என்றால், பெண்ணின் தாயார் கைம்பெண்ணாக இருந்தால் அவர்களை ஒதுக்காதீர்கள். அவர்களை தாராளமாக முன்னே நிற்க வைத்து பாத பூஜை செய்யுங்கள். பெரிய மனதுடன் நடந்து கொள்ளுங்கள். எங்கெல்லாம் நல்ல எண்ணத்துடன் வரவேற்கிறார்களோ அங்கெல்லாம் ஒதுங்கி செல்லாமல் முதல் ஆளாக நின்று சுப காரியங்களை தைரியமாக எடுத்துச் செய்யுங்கள். இது குறித்த பயம் தேவையில்லை ஒருவரின் தலை எழுத்து எப்படி இருக்கிறதோ, அதன்படியே அவர்கள் வாழ்க்கை அமையும். உங்கள் குடும்பத்தில் இது போன்ற கைம் பெண்கள் இருந்தால், அவர்கள் எந்த உறவாக இருந்தாலும் அவர்களுக்கும் முன்னுரிமை கொடுங்கள். அவர்களுக்கு உரிமை கொடுங்கள்.
உதாரணத்திற்கு உங்கள் அண்ணன் மனைவி கைம்பெண்ணாக இருந்தால், திருமண நிகழ்ச்சிகளில் குழந்தைகளை வாழ்த்துவதற்கு அவர்களையும் அழையுங்கள். “உங்கள் வழியாகத்தான் அண்ணனும் எங்கள் குழந்தைகளை வாழ்த்துவார்” என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகளை சொல்லி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். எந்த நிலையிலும் அவர்களை புறக்கணிக்காதீர்கள். அரவணைத்துச் செல்லுங்கள். நாம் அவர் இடத்தில் இருந்தால் எப்படி நடத்தப்படுவோம் என்பதை ஒரு நிமிடம் யோசித்து செயல்படுங்கள். இந்த அறிவுரைகள் கணவன் உடன் வாழாத பெண்களுக்கும், குழந்தைகள் இல்லாத பெண்களுக்கும் பொருந்தும்.
நகரத்தார் சமூகத்தில் கைம்பெண்களைக் கொண்டு ஆரத்தி எடுப்பது வழக்கம். “நம் வீட்டுப் பெண்களை நாங்களே ஒதுக்கி வைத்தால் இந்த சமூகம் எப்படி அவர்களை மதிக்கும்?” என்று அவர்கள் இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். எனவே நீங்களும் கைம்பெண்களை மதியுங்கள். நம் இனமான பெண்களை நாம் மதிக்காவிட்டால் வேறு யார் மதிப்பார்? அவர்களுக்கும் மனது இருக்கிறது. கணவனை இழப்பது என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனவே கைம்பெண் என்று சொல்லி அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்காதீர்கள் என்று தேச மங்கையர்கரசி தனது வீடியோவில் விரிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்.
இறுதியாக.. குங்குமம் அல்லது பொட்டு என்பது திருமண அடையாளம் மட்டுமாக பார்க்கப்படாமல் அது ஒரு கலாச்சார, அழகு சார்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது. ஒரு பெண்ணின் பக்தி, ஆன்ம பலம், அழகுணர்சி ஆகியவை கணவரின் மறைவால் குறைந்து விடுவதில்லை என்று நம்புகின்றனர். இது திருமணத்தின் சின்னமாக பார்க்கப்படாமல் அது ஒரு பெண்ணிற்குரிய பொருளாக பார்க்கப்படுகிறது. எனவே வண்ண பொட்டுக்களை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இன்றைய சமூகத்தில் பொட்டு வைத்துக் கொள்வது என்பது பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். பெண்ணின் குடும்ப பாரம்பரியம், அவர் கற்ற கல்வி, தனிப்பட்ட உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு காரணமாக இந்த பழமைவாதம் ஒழிந்து மாற்றம் ஏற்படுவது நல்ல கலாச்சார முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.