
மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும் இதன் வரலாறு பின்னணியும் சிறப்பம்சங்களும் பலன்களும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். மதுரையம்பதியில் எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் விழாக்களுக்கும் பஞ்சம் இல்லை. அனைத்து சுபதினங்களிலும் மாசி வீதிகள் களைகட்டும். அந்தவகையில் மார்கழி மாதத்தில், மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்க உலா வருவது வழக்கம். சுந்தரேசுவரர் கடோரபாபி என்பவனுக்கு திருவிளையாடலாகவும், சகலஜீவ ராசிகளுக்கும் படியளந்த திருவிளையாடல் ஆகவும் இதைச் சொல்வது உண்டு.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் இதுவும் ஒன்று. 'அஷ்டமி சப்பரம்' என்னும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிகழ்ச்சி, அதிகாலை 5.30 மணிக்கு கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு வெளி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் அடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க சப்பரங்களில் வீதியுலா வந்து, அம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும். நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வர். சப்பரம் வீதிகளில் வலம் வரும்போது அரிசியை தூவிச்செல்வர். மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக்கொண்டு வீடுகளுக்குச் செல்வர். வீட்டில் அரிசி எப்பொழுதும் குறையாமல் இருக்கும் என்பதற்கு மக்கள் அனைவரும் எடுத்துச் செல்வார்கள்.
ஒரு நாள் சிவபெருமானும், உமாதேவியாரும் ஏகாந்தமாயிருக்கும் சமயம், தேவி தாய்க்கே உரிய கவலையுடன், ‘ஏன் சுவாமி! இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறக்கும் வரை துன்பத்திற்கும், பாவத்திற்கும் ஆளாகும் நிலை மாற வழியில்லையா? பிறப்பு, இறப்பின்றி முக்தி அடையவும், பாவங்கள் நீங்கவும் ஒரு வழி சொல்லுங்கள்’ என்றாள்.
அச்சமயம் உயிர்களுக்கெல்லாம் தந்தையான சிவபிரான் திருவாலவாய் எனப்படும் மதுரையின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு அஷ்டமி பிரதட்சிணம் பற்றியும் தேவிக்கு விரிவாக விளக்கினார். மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்கு இகபர துன்பம் நீங்கி முக்தி கிடப்பது உறுதி என்றும் கூறினார்.
ஒருமுறை உலக ஜீவராசிகளுக்கு படி அளப்பதற்காக சிவபெருமான் புறப்படுகிறார். இதையறிந்த பார்வதி தேவியார், ஈசன், உண்மையிலே ஜீவராசிகளுக்கு படி அளக்கத்தான் போகிறாரா? என்பதை சோதிக்க வேண்டும் என்றெண்ணிய பார்வதிதேவி, தச்சனை அழைத்து காஞ்சார மரம் கம்பு வெட்டி, கட்டைச்சிமிழ் செய்து அதனுள் இரண்டு கட்டெறும்புகளை பிடித்து அடைத்து அந்த சிமிழுக்கு திருக்காணி இட்டு வைத்துக்கொண்டாள். படி அளந்து விட்டு கயிலாயம் திரும்பினார் பரமன். சிவபெருமானும், எல்லா உயிர்களுக்கும் படி அளந்த திருப்தியில் திரும்புகிறார். அவரை தடுத்து நிறுத்தி, ‘‘சுவாமி, எல்லா உயிர்களுக்கும் படி அளந்தீர்களா’’ என பார்வதி தேவி கேட்க, ஆம், அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்து விட்டுத்தான் வருகிறேன்.
அதிலென்ன சந்தேகம் உனக்கு என்று பதிலளித்தார். அவரிடம், ‘‘என்னிடத்தில் இரண்டு ஜீவன்கள் பட்டினியாக இருக்கிறதே’’ என்றாராம் உமா தேவி. எங்கே? அந்த ஜீவன்களை என்னிடத்தில் காட்டு’’ என்கிறார். பார்வதிதேவிகட்டைசிமிழை திறந்து காட்ட, அதனுள் இருந்த இரண்டு கட்டெறும்புகளும் அரிசியை கவ்விக்கொண்டு வலம் வந்து கொண்டிருந்தன. அப்போது சிவபெருமான், ‘‘அறைக்குள்ளே இருந்தாலும் அரன் அறியா மாயம் உண்டோ ! சிமிழுக்குள்ளே இருந்தாலும் சிவன் அறியா மாயம் உண்டோ !’’ என்று உரைத்தாராம். வியப்பில் ஆழ்ந்த தேவி, தன் தவற்றை உணர்ந்து சுவாமியிடம் மன்னிப்பு கோருகிறார். இந்தப் புராணக் கதையின் நிகழ்வை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் மதுரை மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் கோயிலில் அஷ்டமி சப்பர திருவிழா என்ற பெயரில் விழா நடைபெறுகிறது.
சப்பரம் செல்லும் இடமெல்லாம் அத்தனை ஜீவராசிகளுக்கும் படியளந்ததை நினைவூட்டிட சாலையின் இருபுறமும் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட மஞ்சள் கலந்த மங்கல அரிசியை அட்சதையாக பட்டர்கள் தூவிக்கொண்டே வருவர், பக்தர்கள் தூவப்பட்ட அரிசியைத் தேடிச் சேர்த்து சென்று தங்கள் வீட்டு பூஜை அறைகளில் வைக்கின்றனர். அவ்வாறு வைப்பவர்கள் வீட்டில் அன்னத்திற்கும், செல்வத்திற்கும் எந்தக் குறைவும் இருக்காது என்பது நம்பிக்கை.