பரிகாரம் செய்ய போறீங்களா.. முதல்ல இத பாருங்க..

First Published Sep 7, 2022, 10:19 PM IST

நம் வாழ்வில் பிரச்சனை என்றாலே நாம் இறைவனை நாடி தான் செல்வோம். அதன் பிறகு, ஜோதிட சாஸ்திரப்படி அவரவர் குலதெய்வத்துக்கோ, பரிகார தலங்களுக்கோ சென்று வழிபாடு செய்து பரிகாரம் செய்திடுவோம். பரிகாரங்களை சரியாக செய்து முடித்திடும் நாம், பரிகாரம் பலன் பெற செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களை செய்ய தவறுகிறோம்.
 

பொதுவாக பரிகார பூஜைகள் செய்திட பிரசித்த பெற்ற தலங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி போகும் போது நாம் என்னெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஆச்சார்ய பெருமக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

முதலில் நாம் கோவிலுக்குள் செல்வதற்கு முன்னதாக கை, கால்களை நன்கு கழுவிட்டு செல்ல வேண்டும். இன்னும் சிலர் தலையில் தண்ணீர் தெளித்து விட்டு செல்வார்கள். ஆனால் அப்படி செல்ல கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கோவிலுக்குள் சென்றதும் பிரகாரத்தில் இருக்கும் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி, சிறு சிதறு தேங்காய் உடைத்து வணங்கி விட்டு செல்ல வேண்டும்.
 

எப்பொழுதுமே பரிகார பூஜைகள் செய்வதற்கு முன்னதாக பித்துருக்கள் வழிபாடு, குலதெய்வம், பிள்ளையார் என வணங்கி பின்னர் பரிகார கடவுள் வழிபாடு என்பதே சரியாக இருக்கும் என தெரிவிக்கின்றனர். குறிப்பாக பரிகார தலங்களுக்கு செல்லும் போது அதிகாலையில் பூஜை செய்திட வேண்டும் என்பதால் முதல் நாள் இரவே அங்கு சென்று விடுவது நல்லது. கோவில்களுக்கு அருகில் இருக்க கூடிய சத்திரங்களோ அல்லது விடுதிகளிலோ தங்குவது நல்லது. எந்தவொரு பரிகாரமாக இருந்தாலும் அதனை குடும்பத்துடன் செய்வதே நல்லது. அதோடு குடும்பத்தில் உள்ள பெண்கள் மாதவிடாய் காலத்தில் செல்வதை தடுக்க வேண்டும். மாதவிடாய் முடிந்தாலும் கூட ஏழு நாட்கள் கழித்தே பரிகாரம் செய்திட வேண்டும்.

முக்கியமாக பரிகாரம் செய்வதற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாக அசைவ உணவுகளை உண்பதை தவிர்த்திட வேண்டும். அதேபோன்று பரிகாரம் முடிந்த பின்னரும் இரண்டு தினங்களுக்கு அசைவ உணவுகளை தவிர்த்திட வேண்டும். அதுமட்டுமின்றி ஆண்கள் மது அருந்த கூடாது. கணவன் மனைவி தாம்பத்திய உறவில் ஈடுபட கூடாது. மேலும் பரிகார வழிபாட்டிற்கு முன்பு குலதெய்வ வழிபாடு என்பது பலனளிக்க கூடும்.

எல்லோரின் குடும்பத்திலும் பொருளாதார நெருக்கடிகள் இருக்கும். ஆனால் பரிகாரத்திற்கு செல்லும் பொது யாரிடமும் கடன் பெற்று செல்லக்கூடாது. அதோடு பரிகாரம் செய்வதற்காக சென்றால் பரிகார தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். அருகில் இருக்கும் கோவிலுக்கோ, புண்ணியம் தரும் பிரதான கோவிலாக இருந்தாலும் அங்கு செல்லக்கூடாது. இதன் காரணமாக கூட பரிகாரத்திற்கான பலன் தாமதமாக கிடைக்கலாம்.
 

குடும்பத்தின் நலனுக்காக பரிகாரம் செய்தாலும், யாருக்காக செய்கிறோமோ அவர் முன்னின்று தான் பரிகாரங்களை செய்திட வேண்டும். இதுபோன்று பரிகாரங்கள் செய்ய நினைப்பவர்கள் பூஜைகள் செய்வதற்கு முன்னதாக துக்க நிகழ்விலோ, துக்க வீடுகளிலோ கலந்து கொள்ளக்கூடாது. ஒருவேளை உறவினர்களின் வீடுகளில் யாரேனும் தவறிவிட்டால் பரிகார பூஜையை தள்ளி வைத்து கொள்ளலாம்.

பரிகாரங்களில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது நல்லது. விளக்குகள் ஏற்றும் போது பிற விளக்குகளிருந்து ஏற்றி வைக்க கூடாது. ஆலயத்தில் இருக்கும் சூலத்தில் எலுமிச்சை பழத்தை ஏற்றி வைப்பது நல்லது.பரிகாரத்தின் போது கோ பூஜை செய்தல் பலனை அதிகரிக்கும். இறுதியாக பரிகாரத்தை அவசர அவசரமாக செய்யாமல், நிதானமாக செய்து இறைவனை வழிபடுங்கள். நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் நன்மையே கிடைக்கும்.
 

click me!