பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட விஜே சித்ரா, கடந்த 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஹேம்நாத்திற்கும், சித்ராவிற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடத்திருந்ததால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனிடையே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். கடந்த 14ம் தேதி சித்ராவின் தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கினார்.
முதற்கட்டமாக சித்ராவின் குடும்பத்தினரிடமும், அதன் பின்னர் கணவர் ஹேமந்த், மாமனார், மாமியார், சக நடிகர், நடிகைகள், நெருங்கிய நண்பர்கள், ஓட்டல் ஊழியர்கள் என பலரிடமும் விசாரணை நடைபெற்றது.
நேற்று இறுதியாக சித்ராவின் உதவியாளரான ஆனந்திடம் ஒருமணி நேரம் விசாரணை நடைபெற்றது. அத்துடன் ஆர்.டி.ஓ.விசாரணை நிறைவு பெற்றது. தற்போது அனைவரிடமும் பெற்ற வாக்குமூலங்களை வைத்து எழுத்துபூர்வ அறிக்கை தயாராகி வருகிறது. அதனை விரைவில் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் சுதர்சனிடம் வழங்க உள்ளார்.