
ஜமா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பாரி இளவழகன், இந்த முறை 'அன்பே டயானா' படத்தில் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் இரட்டை பொறுப்பை ஏற்றுள்ளார். காதல், குடும்ப உறவுகள், சமூகப் பார்வை ஆகியவற்றை நகைச்சுவையுடன் கலந்து சொல்லும் முயற்சியாக இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்தவர் ஆவார். மேலும் பரிதாபங்கள் கோபியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கதை, சென்னை பெரம்பூரை பின்னணியாகக் கொண்டு நகர்கிறது. ரயில் பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தந்தை மற்றும் குடும்பத்தை வழிநடத்தும் தாய் ஆகியோரின் மகனாக இருக்கும் கிருஷ்ணா, விளையாட்டு பயிற்சியாளராக பணியாற்றுகிறார். அந்த நேரத்தில் ஆங்கிலோ-இந்திய சமூகத்தைச் சேர்ந்த டயானாவை காதலிக்கிறார். இரு வெவ்வேறு கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையில் வளர்ந்த இவர்கள் காதலுக்கு, குடும்பமும் சமூகமும் பெரிய சவாலாக மாறுகின்றன. குறிப்பாக பாரம்பரிய நம்பிக்கைகளில் உறுதியாக இருக்கும் கிருஷ்ணாவின் தாய், இந்த உறவை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கிருஷ்ணாவாக நடித்துள்ள பாரி இளவழகன், கதாபாத்திரத்திற்கு தேவையான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டயானாவாக வரும் ரம்யா ரங்கநாதன், ஆங்கிலோ-இந்திய பெண்ணின் பேச்சு, உடை, உடல்மொழி அனைத்திலும் தனித்துவத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமாக அமைவது சேத்தன் மற்றும் ரோஜா நடித்திருக்கும் கணவன்-மனைவி கதாபாத்திரங்கள். அமைதியான தந்தைக்கும், அதிரடியாக பேசும் தாய்க்கும் இடையிலான காட்சிகள் பல இடங்களில் சிரிப்பையும், சில இடங்களில் உணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மகனுக்கு துணையாக நிற்கும் தந்தையின் பாத்திரம் மனதில் நிற்கிறது.
நகைச்சுவை நடிகர் கோபிக்கும் கதையில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அவரது வசனங்கள் சற்று நீளமாகத் தோன்றினாலும், காமெடி காட்சிகள் படத்திற்கு நல்ல பலமாக அமைந்துள்ளன. காதல் கதைக்குள் சமூகத்தில் இன்னும் நிலவி வரும் சாதி மனநிலையை இயக்குநர் மென்மையாக பதிவு செய்துள்ளார். பிரசங்கம் போல இல்லாமல், கதையின் ஓட்டத்திலேயே அந்த கருத்துகளை சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட், பெரம்பூரை இதுவரை திரையில் அதிகம் காணாத அழகான கோணத்தில் பதிவு செய்துள்ளார்.
நகரின் இயல்பான சூழலையும், அன்றாட வாழ்க்கையையும் காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. பரத் சங்கரின் பின்னணி இசையும், பாடல்களும் கதையின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. படத்தின் இறுதி அரைமணி நேரம் முழுக்க நகைச்சுவை, எமோஷனல் மற்றும் குடும்ப பாசம் கலந்து ரசிகர்களை மகிழ்விக்கிறது. சிரிப்போடு ஒரு நல்ல கருத்தையும் சொல்லும் இந்த படம், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு ஃபீல் குட் திரைப்படமாக அமைந்துள்ளது. மொத்தத்தில், 'அன்பே டயானா' காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் சமூகக் கருத்துகளை சமநிலையுடன் இணைத்து, மனநிறைவான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை நிச்சயம் தரும்.