சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக அரசியல் வேகம் எடுத்து இருக்கும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் எடுக்கும் அடுத்தகட்ட மூவ் தெளிவாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன் குறித்து எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காமல் கூட்டணிக்காக அரசியல் கட்சிகளுடன் பேசி வருகிறோம் என்று கூறி இருப்பது பாஜக வகுத்துள்ள ஒருங்கிணைப்பு யுக்திகளின் பிரதிபலிப்பு என்றே அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
டெல்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துபோன பின்னர் வெளியான இந்த அரசியல் நிலைப்பாடு தமிழகத்தில் பாஜக வெறும் ஆதரவு கட்சி அல்ல, கூட்டணியின் வடிவமைப்பாளராக செயல்படுகிறது என்பதை ஏன் காட்டுகிறது. கூட்டணி அரசியலுக்கு நேரடியாக தாக்கம் ஏற்படுத்தக்கூடிய டிடிவி.தினகரன் விவகாரத்தில் அதிமுக கதவை திறந்து வைத்திருப்பது பாஜக வகுத்துள்ள தேர்தல் வரைபடத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. பாஜக கணக்கில் முக்கியமானது ஒன்றுதான் தென் தமிழக வாக்குகள் சிதறக்கூடாது என்பது.