திமுக எதிர்ப்பு ஓட்டுகள் எங்கே போகும்..? விஜய்க்கு இபிஎஸ் விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!

Published : Mar 25, 2026, 05:52 PM IST

கூட்டணிக் கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது அவர்கள் விருப்பம் என்றும், திமுகவைப் போல தாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

PREV
14
மெகா கூட்டணியும் தொகுதிப் பங்கீடும்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு மெகா கூட்டணி உருவெடுத்துள்ளது. பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே என வலுவான வாக்கு வங்கி உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து, 'வெற்றிக் கூட்டணியை' அதிகாரப்பூர்வமாக அறிவித்த கையோடு, அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் இபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்களை வெளியிட்ட இபிஎஸ், "கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட தொகுதிகள் தவிர எஞ்சிய அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாகப் போட்டியிடும். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்களும், பாமகவிற்கு 18 இடங்களும், அமமுகவிற்கு 11 இடங்களும், தமாகாவிற்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் புரட்சி பாரதம் போன்ற கட்சிகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

24
விஜய் கேள்விக்கு 'நச்' பதில்

பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடப் போவதாக வரும் தகவல்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த இபிஎஸ், "இது என்ன கேள்வி? அரசியலில் சின்ன கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளை நாங்கள் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி நிச்சயம் வெல்லும்" என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும், கூட்டணிக் கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது அவர்கள் விருப்பம் என்றும், திமுகவைப் போல தாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டோம் என்றும் அவர் ஜனநாயகப் பண்புடன் குறிப்பிட்டார்.

எதிர்ப்பு வாக்குகள் எங்கே போகும்?

தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதால் திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரியுமா? என்ற கேள்விக்கு இபிஎஸ் ஆக்ரோஷமாகப் பதிலளித்தார்:

"மக்களுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுபவர்களுக்கே எதிர்ப்பு வாக்குகள் கிடைக்கும், வீட்டில் முடங்கிக் கிடப்பவர்களுக்குக் கிடைக்காது. கடந்த 5 ஆண்டுகளாக மக்களின் பிரச்சினைகளுக்காக அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தான் வீதிக்கு வந்து போராடினோம். மக்கள் இந்த ஆட்சியை அகற்ற முடிவெடுத்துவிட்டார்கள். அந்த எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் எங்கள் கூட்டணிக்குத்தான் வரும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை."

34
திமுகவின் 'கொட்டகை' அரசியல் மீதான தாக்குதல்

திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகவும், மக்களை அடைத்து வைத்திருப்பதாகவும் வந்த புகார் குறித்துப் பேசிய அவர், "இன்று கரூர் முழுவதும் கொட்டகை போட்டு ஆடு, மாடுகளை அடைப்பது போல மக்களை அடைத்து வைக்கிறது திமுக. பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள். ஊடகங்கள் தான் இந்த ஜனநாயகப் படுகொலையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். எத்தனை கொட்டகைகள் போட்டாலும் மக்கள் மனதை மாற்ற முடியாது" எனச் சாடினார்.

44
திட்டங்களின் ஒப்பீடு

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 63 ஆயிரம் கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் புதிய விமான நிலையங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளைப் பட்டியலிட்ட இபிஎஸ், திமுக ஆட்சியில் தமிழகம் 'கடன் வாங்குவதில் மட்டுமே முதன்மை மாநிலமாக' மாறியுள்ளது என்று விமர்சித்தார். மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும் என்பதாலேயே இந்தத் தேசிய அளவிலான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

இறுதியாக, "எங்கள் கூட்டணித் தலைவர்கள் எறும்புகளைப் போலவும், தேனீக்களைப் போலவும் சுறுசுறுப்பாக உழைத்து, 5 ஆண்டுகால அவல ஆட்சியைத் தூக்கியெறிந்து அதிமுகவை மீண்டும் அரியணையில் அமர்த்துவார்கள்" என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories