2011ல் விஜயகாந்த்.. 2026ல் பிரேமலதா.. திமுக கூட்டணியில் வைகோவுக்கு ஆப்பு வைத்த தேமுதிக..!

Published : Mar 14, 2026, 03:00 PM IST

வைகோவின் அரசியல் பயணம் எப்போதுமே போராட்டக் களம்தான். ஆனால், இந்த முறை கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் அதிருப்தி மற்றும் சின்னம் குறித்த நெருக்கடி என இரட்டைச் சவால்களை அவர் எதிர்கொண்டுள்ளார்.

PREV
14
மதிமுக-வின் 2026 களேபரங்கள்

தமிழக அரசியலில் 'வரலாறு மீண்டும் திரும்புகிறது' என்பார்கள். 2011-ல் வைகோ எடுத்த ஒரு அதிரடி முடிவுக்கும், இன்று 2026-ல் மதிமுக சந்தித்து வரும் நெருக்கடிக்கும் இடையே ஒரு மெல்லிய நூல் இழை ஓடிக்கொண்டிருக்கிறது. அன்று விஜயகாந்தின் வருகையால் தேர்தலையே புறக்கணித்த வைகோ, இன்று அதே தேமுதிக திமுக கூட்டணிக்குள் வந்திருக்கும் சூழலில், தனது கட்சியைத் தக்கவைக்கப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மதிமுகவுக்கு, விஜயகாந்தின் தேமுதிக உள்ளே வந்ததால் மிகக் குறைந்த இடங்களே ஒதுக்கப்பட்டன. மானமே முக்கியம் என நினைத்த வைகோ, அந்தத் தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்து அதிர்வலையை ஏற்படுத்தினார். காலச் சக்கரம் சுழன்று இன்று 2026 தேர்தலிலும் அதே போன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. இப்போது திமுக கூட்டணிக்குள் தேமுதிக கைகோர்த்துள்ளதால், மதிமுகவின் பேரம் பேசும் சக்தி வெகுவாகக் குறைந்துவிட்டது.

24
உதயசூரியன் சின்னமும்... கசப்பான ஒப்பந்தமும்!

நீண்ட இழுபறிக்குப் பிறகு மதிமுகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் உச்சக்கட்ட அதிர்ச்சி என்னவென்றால், அந்த 4 இடங்களில் 3 தொகுதிகளில் 'உதயசூரியன்' சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திமுக - மதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதுதான். தனது கட்சியின் அடையாளமான பம்பரம் சின்னத்தை மீட்டெடுக்கப் போராடும் தொண்டர்களுக்கு, இந்த 'உதயசூரியன்' சின்ன ஒப்பந்தம் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதோடு, கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

34
பதவியா? சின்னமா? வைகோவின் 'செக்'

இந்த ஒப்பந்தத்தால் மதிமுகவின் நான்கு துணைப் பொதுச்செயலாளர்களான தி.ராஜேந்திரன், ஆடுதுறை முருகன், டாக்டர் ரொஹையா மற்றும் மணி ஆகியோர் பெரும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்கிற கனவில் இருந்த இவர்கள், உதயசூரியன் சின்னத்தில் நின்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மதிமுக கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இவர்களை அழைத்துப் பேசிய வைகோ, "உங்களுக்கு கட்சிப் பதவி முக்கியமா? இல்லையென்றால் எம்.எல்.ஏ. ஆவது முக்கியமா?" என்று நேரடியாகக் கேட்டுவிட, வேறு வழியின்றி "எம்.எல்.ஏ பதவிதான் முக்கியம்" என்று கூறி தங்களது தேர்தல் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு அமைதியாகிவிட்டார்களாம்.

44
டாக்டர் ரொஹையாவின் தனிப்போர்

ஆனால், தாயக வட்டாரத்தில் ஒரு தகவல் பலமாக அடிபடுகிறது. துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா மட்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல், மதிமுகவின் தனிச் சின்னத்தில் (பம்பரம் அல்லது சுயேச்சை சின்னம்) போட்டியிடப் போவதாகப் பேசப்படுகிறது. மதிமுக தற்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்கிற அந்தஸ்தை இழந்துள்ள நிலையில், டாக்டர் ரொஹையா தனிச் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றால் மட்டுமே மதிமுக மீண்டும் ஒரு 'பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட' கட்சியாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதற்காகவே அவர் தனித்துக் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

வைகோவின் அரசியல் பயணம் எப்போதுமே போராட்டக் களம்தான். ஆனால், இந்த முறை கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் அதிருப்தி மற்றும் சின்னம் குறித்த நெருக்கடி என இரட்டைச் சவால்களை அவர் எதிர்கொண்டுள்ளார். உதயசூரியன் நிழலில் ஒதுங்குவதா அல்லது தனிச் சின்னத்தில் நின்று கட்சியின் அந்தஸ்தை மீட்பதா என்கிற இந்த தர்மசங்கடமான சூழலில், மதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு அந்தக் கட்சியின் ஆயுளைத் தீர்மானிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories