ராமதாஸின் 'பிளான்-பி' வியூகம்.! திராவிட கட்சிகளுக்கு பாடம் புகட்ட பெரிய அய்யா போடும் பலே திட்டம்.!

Published : Feb 11, 2026, 01:58 PM IST

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது. 

PREV
17
பாமகவில் முற்றும் மோதல்

பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட கால வரலாற்றில் தற்போது அதன் நிறுவனரான டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் மோதல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முற்றி, தற்போது கட்சி இரண்டாக உடையும் அளவிற்கு மாறியுள்ளது. பாமகவின் தலைமைப் பொறுப்பு மற்றும் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நீண்ட காலமாக நடந்து வரும் யுத்தம் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

27
சட்டப்போராட்டம் நடத்தும் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவியவர் என்ற முறையில் மாம்பழம் சின்னம் மற்றும் கட்சியின் பெயர் ஆகியவற்றிற்கு உரிமை கோரி ராமதாஸ் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வந்த்தார். தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் ஆகியவை அன்புமணி தரப்பே உண்மையான பாமக என்று தெளிவுபடுத்தி உள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் அன்புமணியை கட்சியின் தலைவராக அங்கீகரித்து மாம்பழம் சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது. கட்சி மற்றும் சின்னம் தன்னிடம் இருப்பதாகவும், போலி ஆவணங்களை கொடுத்து அன்புமணி சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றிருப்பதாகவும் கூறி ராமதாஸ் தரப்பு மேல்முறையீட்டிற்காக நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

37
புதிய கட்சி தொடங்கும் ராமதாஸ்?

இந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் புதிதாக ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்கிற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கட்சியும் சின்னமும் தன் கையை விட்டுப் போனாலும் தனது அரசியல் செல்வாக்கு இன்னும் மங்கவில்லை என்பதை நிரூபிக்க ராமதாஸ் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி தரப்பிற்கும், தன்னை கூட்டணியில் சேர்க்காத திராவிட கட்சிகளுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக பிளான் பி-ஐ ராமதாஸ் வைத்திருக்கிறார் என்று பாமக தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

47
அய்யா பாமக

‘அய்யா பாமக’ என்கிற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி அதை முறைப்படி பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கட்சி அதே நிறம், அடையாளங்களை உள்ளடக்கியதி என்றும், அமமுக கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்று இருப்பதைப் போல ஐயா பாமக கொடியில் அதே வண்ணங்களோடு டாக்டர் ராமதாஸின் முகத்தைப் பதித்து புதிய கொடி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த புதிய கட்சியின் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் தனித்து களம் இறங்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

57
ராமதாஸின் புதிய கட்சிக்கு உள்ள சவால்கள்

பாமகவின் அதிகாரப்பூர்வ சின்னமான மாம்பழம் மற்றும் கட்சி பெயர் அன்புமணி வசம் உள்ளதால் ராமதாஸ் புதிய கட்சி தொடங்கினால் அவர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டி இருக்கும். இது பாமக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். அன்புமணி தரப்பு அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. எனவே ராமதாஸ் நிச்சயம் அதிமுக அணியில் இடம்பெற மாட்டார். திமுக தலைமையிலான அணியில் இடம்பெறுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவர் தனியாக போட்டியிட வேண்டிய சூழல்கள் உருவாகி உள்ளது.

67
உடையும் பாமகவின் வாக்கு வங்கி

வட தமிழகத்தில் பலமாக இருந்த பாமகவின் வாக்கு வங்கி மற்றும் வன்னியர் சமுதாய வாக்குகள் இரண்டாகப் பிரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராமதாஸின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் அன்புமணியின் நவீன அரசியல் அணுகுமுறை பிரிந்து நிற்பது தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இளைய தலைமுறையினர் அன்புமணி பக்கமும், மூத்த தலைவர்கள் ராமதாஸின் பக்கமும் இருப்பதால் பாமக தொண்டர்களிடையே கடுமையான குழப்பம் நீடித்து வருகிறது.

77
தனித்து போட்டியா?

தமிழக அரசியலில் மூத்த தலைவராக விளங்கும் ராமதாஸ், தனது செல்வாக்கை நிரூபிக்க, வட தமிழகத்தில் சுமார் 50 தொகுதிகளில் தனித்து வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் அன்புமணி தரப்பிற்கும், இரு பெரும் திராவிட கட்சிகளுக்கும் தனது செல்வாக்கை நிரூபிக்க முடியும் என்று ராமதாஸ் நம்புகிறார். அவர் தனித்துப் போட்டியிடுகிறாரா அல்லது தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறாரா என்பது குறித்து இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை பொறுத்தே பாமகவின் எதிர்காலமும், டாக்டர் ராமதாஸின் நடவடிக்கையும் அமையும்.

Read more Photos on
click me!

Recommended Stories