அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், கடந்த ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி குமரேஷ் பாபு முன்நிலையில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்த அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனிடையே, இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.
இதனையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர் ஒருவர் எம்ஜிஆர் ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமிக்கு தலையில் தொப்பி, கூலிங் கிளாஸ் அணிவித்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.